இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா – ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கையில்  கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை  ஒரு   இலட்சத்து 517 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  இந்நோயால்  638 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில்  சுமார் இரு மாதங்களின் பின்னர் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, குருநாகல், ஆகிய மாவட்டங்கள் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது 111 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கிலும் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளது. இதுவரை 436 தொற்றாளர்கள் வவுனியாவில் இனங்காணப்பட்டுள்ளனர். அதே நேரம் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளது. வவுனியாவில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 193பேர் சுயதனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்

மேலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில்  17 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏழு பேரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று பேரும், குச்சவெளி பிரதேசத்தில் 4 பேரும் கிண்ணியா பிரதேசத்தில் இருவரும், கந்தளாயில் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அங்கு இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உலக அளவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாடுகளில்  89ஆவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.