இலங்கையின் நீதித்துறை ஒருபோதும் நீதியை வழங்காது – படுகொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை – நேர்காணல்

 2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் மனோகரன் ரஜீகர் (பிறந்த திகதி 22.09.1985, அகவை 21), யோகராஜா ஹேமச்சந்திரா (பிறந்த திகதி 04.03.1985, அகவை 21), லோகிதராஜா ரோகன் (பிறந்த திகதி 07.04.1985, அகவை 21), தங்கதுரை சிவானந்தா (பிறந்த திகதி  06.04.1985, அகவை 21), சண்முகராஜா கஜேந்திரன் (பிறந்த திகதி 16.09.1985, அகவை 21) ஆகியோர் கடற்படையின் சோதனைச் சாவடியில் மறித்து வைக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த விசேட அதிரடிப்படையினர் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் மாணவர்களை சரமாரியாக சுட்டுக் கொன்றார்கள்.

மகிந்த ராஜபசவின் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் 2006 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும் பாதிக்கப்பட்ட கடும்பங்களின் கோரிக்கைகள் பல்வேறு போராட்டங்கள், சர்வதேச ரீதியான அழுத்தங்கள் காரணமாக சம்பவம் இடம்பெற்று 7 வருடங்களின் பின்னரே அதாவது 2013 ஆம் ஆண்டே சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகரொருவர் உட்பட 12 பேர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

அன்று முதல் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த முதலாம் திகதி அன்று அனைத்து குற்றவாளிகளையும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பு குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட தாயகத்தில் நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.IMG 20190706 WA0051 இலங்கையின் நீதித்துறை ஒருபோதும் நீதியை வழங்காது - படுகொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை - நேர்காணல்

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட மனோகரன் ரஜீகரின் தந்தையான (தற்போது லண்டனில் வசித்துவரும்) வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் இலக்கு மின்னிதழுக்கு மின்னஞ்சல் மூலம்  தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதன் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- 2006ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த துன்பியல் சம்பவத்தால் நீதிக்காக கண்ணீருடன் காத்திருந்தபோது  தற்போது வழக்கு விசாரணைகள் நடைபெற்ற நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 13படையினர் விடுவிக்கப்பட்டுள் ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்- இந்த தீர்ப்பை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இதுவரை எனக்கு எந்த அழைப்பாணையும் அனுப்பப்படாமல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் விடுதலைக்கான காரணமாக போதிய ஆதரங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. என்னிடம் போதிய அளவு ஆதாரம் உள்ளதால் இந்த தீர்ப்பை நான் முழுமையாக எதிர்க்கின்றேன்.

கேள்வி:- சிறீலங்கா நீதி என்பதை எதிர்பார்க்க முடியாத ஒரு நாடாகிவிட்டதெ ன்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது. புதிய உலக ஒழுங்கில் இதற்கான தீர்வாக நீங்கள் எதனை கருதுகின்றீர்கள்?

பதில்- இலங்கை மீது சர்வதேச நாடுகளின் அழுத்தம் இல்லாதவரை தமிழர்களின் நீதிக்கான விடயங்களில் தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டுவரும் என்பதை உலகம் உணரும்வரை எமக்கான நீதி என்பது சாத்தியமற்றது. இதை உலக சமூகம் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதே எனது கருத்து.

கேள்வி:- உள்நாட்டிலும் நீதி மறுக்கப்பட்டு சர்வதேச அரங்கிலும் நீதிக்கான பொறிமு றைகள் மிகக் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் எங்களைப் போன்றவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவர்கள் யார்? அல்லது உண்மையில் அதற்கான பொறிமுறை இந்த உலகத்திடம் உண்டா?

பதில்-  எமக்காக குரல் கொடுப்பதற்கு பல்வேறு தரப்பினர் உள்ளார்கள். தற்போதைய உலக ஒழுங்கிலும் எமக்கான நீதியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. ஆனால் எமது அரசியல் சிவில் சமூகங்களின் வேலைத்திட்டங்கள் பரந்த அளவிலே ஒன்றிணைந்து முழுமூச்சுடன் முன்னெடுக்கும்போது நிச்சயம் என்னைப்போன்ற நீதிக்காக ஏங்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும். இந்த விடயத்திலே சர்வதேச சனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு பொருத்தமான செயற்திட்டங்களை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்தால் எமக்கான நீதியை சாத்தியப்படுத்தமுடியும்.

கேள்வி:- இந்த வழக்கினை மேல் முறையீடு செய்வதன் ஊடாக இலங்   கையின் நீதித்துறைக்குள் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற முடியும் என்று கருதுகின்றீர்களா?

பதில்-  இலங்கையின் நீதிக்கட்டமைப்பு அரசியல் தலையீடு இல்லாமல் சுயா தீனமாக இருந்திருந்தால் நாம் இன்று எமது பிள்ளைகளை இழந்திருக்கத் தேவையில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் தாக்கல் செய்த எந்தவொரு வழக்கிற்கும் நீதி கிடைத்ததாக நான் அறியவில்லை. அதை எமது வழக்கிலும் கண்டுகொண்டேன். ஆகவே மேன்முறையீடு செய்வதால் எவ்விதமான நியாயத் தினையும் இலங்கையின் நீதித்துறைக்குள்ளே பெற்றுக்கொள்ள முடியாது.

கேள்வி :- நீங்கள் சர்வதேச அரங்கிலே பலதரப்பினருடன் இந்த விடயம் குறித்து பேச் சுக்களையும், முறைப்பாடுகளையும், சாட்சியங்களையும் அளித்துள்ள நிலையில் அவர்களின் முயற்சிகள் எவ்வாறு உள்ளன?

பதில்- உலகநாடுகளின் அழுத்தமில்லாத வரையில் இலங்கை அரசாங்கம் தான் தோன்றித்தனமாகத்தான் செயற்படும் என்பது வெளிப்படையானது. ஆகவே நாங்கள் சந்திக்கின்ற அனைத்து சர்வதேச தரப்புக்களிடத்திலும் அழுத்தங்களை அளிக்குமாறே தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். அவர்களும் அதுதொடர்பில் நடவடிக்கைகளை எடுக்காமலில்லை. எனினும் நாம் மேலும் அழுத்தங்களை வழங்குமாறு தற்போதைய சந்தர்ப்பத்திலும் கோருகின்றோம்.

கேள்வி :- தாயகத்தில் இருக்கின்ற பாதிக்கப்பட்ட ஏனைய பெற்றோர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று கருதுகிறீர்கள்?

பதில்-  தாயகத்தில் உள்ள பெற்றோர்கள் இன்று எதனையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். காரணம் தமது நீதிக்காக நடவடிக்கைகளை முன்னெடுக் கின்றபோது முப்படையினரும், புலனாய்வுத்துறையினரும் அவற்றை முடக்குவதற்கே திட்டமிட்டு முயல்வார்கள். நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். ஆகவே அவர்களால் எதனையும் செய்ய முடியாது. புலம்பெயர்ந்தவர்களே பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக நடவடிக்கைகளை வெளியிருந்து மேற்கொள்ள முடியும். அது தான் சாத்தியமானதொரு வழியாக இருக்கின்றது.

கேள்வி :- மாவட்ட நீதவான் நீதிமன்றம் போதிய ஆதரங்கள் இல்லையென்று கூறுகின்ற நிலையில் தங்களிடத்தில் எத்தகைய ஆதாரங்கள் இருக்கின்றன?

பதில்- என்னிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. எனது மகனை தொலைத்துவிட்ட நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட ஒரு தரப்பாக இருக்கும் என்னையும் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முன்னதாக அழைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதன்மூலம் அரசியல்வாதிகளின் பிடியில் நீதித்துறை இருக்கின்றது என்பதையும் அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டே நீதித்துறை செயற்படுகின்றது என்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக காட்டுகின்றது.

கேள்வி :- அவற்றை பயன்படுத்தி தாயகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை உள் நாட்டில் முன்னெடுக்க முடியுமா?

பதில்-என்னிடம் ஆதாரங்கள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது. காரணம், உள்நாட்டில் நாம் இத்தகைய விடயங்களை முன்வைத்து நீதித்துறையை நாடுகின்றபோது எமது பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகின்றது. ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இழுத்தடிப்புக்கள் செய்யப்பட்ட தருணங்களில் எல்லாம் இந்த கொடூரம் தொடர்பான அநேகமான சாட்சிகள் தமது பாதுகாப்பு நிமித்தம் தற்போது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். இவ்வா றான நிலையில் எவ்வாறு அவர்களிடத்தில் நீதியை எதிர்பார்க்க
முடியும்.