இறந்தவர்கள் பெயரில் மின்னஞ்சல் வாக்குகள்- ஜோ பைடன் மீது தேர்தல் மோசடி புகார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மீது இறந்தவர்களின் பெயரில் மின்னஞ்சல் வாக்குப் பதிவு செய்யப்பட்டடதாக தேர்தல்மோசடிப் புகார் எழுந்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.  தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வரும் ட்ரம்ப், தேர்தலில் மிகப் பெரிய வாக்குப் பதிவு மோசடி நடந்துள்ளது என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ட்ரம்ப்பின் புகாரை அடுத்து சில தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. ட்ரம்ப் தரப்பு கோரிக்கையை அடுத்தே ஜோர்ஜியா பகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஜோ பைடனுக்கு இறந்தவர்கள் பெயரில் மின்னஞ்சல் வாக்குப் பதிவு அளிக்கப்பட்டுள்ளது என்ற தேர்தல் மோசடியை பிரபல செய்தியாளர் டக்கர் கார்ல்சன்  பதிவு செய்துள்ளார். இதற்கு ஆதாரமாக இறந்தவர்களின் வாக்குப் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த மோசடிகளை தொடர்ந்து கண்டு கொள்ளாமல் சிலர் பைடனுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் என்று அமெரிக்க முன்னணி ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.