இராணுவத் தளபதி மீதான பயணத் தடையை நீக்குமாறு பொம்பியோவிடம் கேளுங்கள்- சஜித்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத் தடை நீக்கப்பட வேண்டும். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கை வரும்போது இது குறித்துப் பேச்சு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் சஜித் பிரேமதாஸ.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, எதிர்க்கட்சி தலைவர் விசேட கூற்றொன்றை எழுப்பிய வேளையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவரின் இந்தப் பயணத்தின் போது, வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கிறேன்.

இந்த சந்தர்ப்பத்தில் வெளிவிவகார அமைச்சரிடமும், ஜனாதிபதி, பிரதமரிடமும் ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன். எமது நாட்டின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. எனவே பொம்பியோவுடனான பேச்சின் போது எமது இராணுவத் தளபதிக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வலியிறுத்த வேண்டும்.

இந்த விடயத்தில் கடிதம் எழுதிக் கொண்டு இருக்கவோ வேறு வழிகளில் தொடர்பு கொள்ளவோ அவசியம் இல்லை. அவர் இலங்கைக்கு வருகின்றார், நேருக்கு நேராக அவரை சந்திக்கப் போகின்றீர்கள். எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற முன்னர் அவரிடம் இருந்து வாக்குறுதி ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

இறுதிப் போர் சமயத்தில் அவரும், அவரின் கீழ் செயல்பட்ட படையினரும் இழைத்தனர் என்று கூறப்படும் மனித உரிமைகள் மீறல், போர்க் குற்றங்களுக்காக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா வர பயணத் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.