இரண்டு மாதத்தில் 63 ஊடகவியலாளர்கள் படுகொலை

உடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாக இந்த வருடம் கடந்து செல்கின்றது. கடந்த வருடம் 61 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டபோதும் இந்த வருடம் பாலஸ்த்தீன – இஸ்ரேல் போரின் போது மட்டும் 63 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு கடந்த வியாழக்கிழமை(14) தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 45 ஊடகவிலயாளர்கள் கடமையை செய்தபோது கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 61 பேரே கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் பாலஸ்த்தீன – இஸ்ரேல் போரில் 63 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 22 மாதங்களாக இடம்பெற்றுவரும் உக்ரைன்-ரஸ்ய போரில் 11 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடந்த ஆண்டு 26 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டாலும், இந்த வருடம் அது 6 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த வருடம் 65 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டிருந்தனர் அது இந்த வருடம் 54 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. சிறைகளில் இருக்கும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு 569 ஆக இருந்தபோதும் இந்த ஆண்டு 521 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.