கேணல் தர அதிகாரி உட்பட 115 இஸ்ரேலிய படையினர் காசாவில் பலி

காசா மீது இஸ்ரேலினால் நவம்பர் மாதம் 2 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை(14) வரையிலும் 115 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய தரப்பு தெரிவித்துள்ளது.

நேற்று கொல்லப்பட்டவர்களில் கொலானி இலக்கு காலாட்படை பிரிகேட்டின் கேணல் தர கட்டளை அதிகாரியும் அடக்கம். வடக்கு காசா பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களில் சுயயேயா அகதிமுகாம் பகுதியில் 9 படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அது ஒரு கெரில்லா தாக்குதல் என மத்திய கிழக்கு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆனால் கடந்த மாதம் வடக்கு பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை என்பது ஒரு மாதத்தின் பின்னர் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. ஆனால் தற்போதும் வடக்கில் படையினர் கொல்லப்படுவது என்பது வடக்கு பகுதியை இஸ்ரேல் முற்றாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவில்லை என்பதையே காட்டுகின்றது.

எனினும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இடம்பெறும் தரை தாக்குதலில் கொல்லப்படட 115 படையினரில் 10 விகிதமானவர்கள் தவறுதலாக தமக்குள் இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதிகளவு படையினர் தமக்கு இடையிலான தாக்குதல்களில் கொல்லப்படுவது என்பது இஸ்ரேலிய படையனர் கெரில்லா தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது திணறுகின்றனரா இல்லை புதிதான இணைக்கப்படட பின்னிருக்கை படையினர் களமுனையில் பதற்றத்தில் காணப்படுகின்றனரா என்ற கேள்விகள் எழுகின்றன.

இதனிடையே, கடந்த ஒக்டோபர் மாதம் ஹமாஸ் படையினர் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து தற்போது வரையிலும் 450 இற்கு மேற்பட்ட இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.