இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு – பிஞ்ஞகன்

மனிதன் – மனித இனம் உயிர் வாழ்வதற்கு உணவு‚ உடை‚ உறையுள்(வீடு) மூன்றும் இன்றியமையாதன. அடிப்படைத் தேவையான உணவுக்கும் உடைக்கும் அப்பால் தான் வாழும் நிலத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவென்பது அவனது அகப்புற வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது. ஒரு இனக்குழுமத்திற்கு தாம் பூர்வீகமாய் வாழ்ந்து வரும் நிலத்துடன் உள்ள தொடர்பானது வாழ்வடன் பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்டுள்ளது. 1990 இல் வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களும் 2006 இல் சம்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களும் ஒரே விடயத்தைத்தான் கூறுகிறார்கள்.

நீங்கள் எங்களுக்கு நிவாரணம் தரவேண்டாம். எங்களை வேறு இடத்தில் குடியேற்றி வீடு கட்டித் தரவேண்டாம். எங்களை எங்களுடைய சொந்த இடத்திற்கு போக விடுங்கள். ஒரு கொட்டிலைப் போட்டு கஞ்சியைக் குடித்தாவது சீவிப்பம்.”

மனிதனுக்கும் அவனது பூர்வீக நிலத்துக்கு மிடையிலான ஆத்மார்த்தப் பிணைப்பானது மேற் கூறப்பட்ட மக்களின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ஒரு இனம் தாம் பாரம்பரியமாய் வாழ்ந்த மண்ணில் உயிர் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரங்களைத் தன்னகத்தே காலங்காலமாகத் தேக்கி வைத்திருக்கும். புறத்தே நேரடியாகக் காணமுடியாத ஒரு வளம் நிலத்தில் – பூர்வீகக் காணியில் இருப்பதை சம்பூரில்‚ வலிகாமத்தில்‚ கேப்பாப்புலவில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் உணர்கிறார்கள். ஒரு மக்கள் கூட்டத்தின் நிலத்தின் மீதான உரிமையைப் பறிப்பதென்பது அவர்களது வாழும் உரிமையைப் பறிப்பதற்குச் சமமாகும்.

இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் 2500 வருடங்களுக்கும் மேலான சரித்திரத்தைக் கொண்டுள்ளனர். தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் மரபுவழித் தாயகமாகும். சிங்களவர்களுக்கு சார்பாக எழுதப்பட்ட மகாவம்சமோ அல்லது இலங்கைத் தமிழரின் சரித்திரத்தை விபரிக்கும் எந்த ஒரு வரலாற்று நூலுமோ கிழக்கிலங்கையையோ‚ வன்னிப் பகுதியையோ அல்லது யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியத்தையோ எந்த ஒரு சிங்கள அரசனும் ஆண்டதாக சரித்திரத்தில் குறிப்பிடவில்லை.

இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களது பாரம்பரிய நிலம் தமிழினப் படுகொலைகளின் ஊடாகத் தமிழ் மக்களை அச்சுறுத்தி பூர்வீகக் காணியில் இருந்து வெளியேற்றியதன் மூலமும் தமிழரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

குறிப்பட்ட ஒரு சமூகக் குழுமம் தன்னை ஒரு தேசிய இனமாகப் பிரகடனப்படுத்திக் கொள்வதற்கு அக் குழுமத்திற்குத் தனித்துவமான மொழி‚ வரலாறு‚ இலக்கியம்‚ கலைகலாசார பின்னணி என்பவற்றுடன் தொடர்ச்சியான நிலப்பரப்பும் அந் நிலப்பரப்புடன் வரலாற்றுத் தொடர்பும் இருத்தல் வேண்டும் என்று மேற்குலக இனவியல் வரலாற்றாசிரியர்கள் வரையறுத்துள்ளனர். தாயக்கோட்பாடு என்ற கருத்தியல் இதிலிருந்தே எழுந்தது. தமிழனத்தின் தனித்துவத்தை இல்லாதொழித்து‚ தங்களைத் தாங்களே ஆளும் சுயநிருணயத்தை கோரமுடியாத சிறுபான்மை சமூகமாக்கி‚ தமிழரின் தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் நோக்குடன் வடக்குக் கிழக்கை இணைக்கும் எல்லைக் கிராமமான மணலாற்றை விட்டு தமிழர்களை விரட்டி வெலிஓயா என்ற சிங்களக் குடியேற்றத் திட்டம் 1980 இல் உருவாக்கப்பட்டது.

தமிழர்களின் மரபுவழித் தாயகக் கோட்பாட்டை சிதைத்து இலங்கைத் தீவானது‚ கௌதம புத்தரால் சிங்களவர்களுக்கு அர்ப்பணிக்கபட்ட பூமி என்ற மகாவம்ச மாயாவாத சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்காக இலங்கைத் தீவு முழுவதையும் சிங்களமயமாக்குதலை நோக்காகக் கொண்டு தமிழர் பாரம்பரிய நிலத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் 1949 முதல் உருவாகத் தொடங்கின.

1949 இல் தொடங்கி 2014 பெப்பிரவரி வரை நின்று பார்க்கையில் இலங்கைத் தீவில் தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்யுமளவுக்கு (Ethnic Cleansing)  தமிழ் நிலத்தில் – வடகிழக்கில் நிலமானது தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு குடிப்பரம்பலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒரு புறம் வடகிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழினம் 1949 இலிருந்து தனது நிலத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தாலும் இராணுவ ஆக்கிரமிப்பாலும் படிப்படியாக இழந்து வர மறுபுறம் ஏறத்தாழ 250 வருடங்களாக அரை அடிமைகளாக வாழும் மலையகத் தமிழினம் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களாலும் திட்டமிட்ட இனக் கலவரங்களாலும் தமது பூர்வீக நிலத்தின் மீதான இருப்பையும் உரிமையும் இழந்து வருகிறது.

Budda colonisaton இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் - ஒரு வரலாற்று நோக்கு - பிஞ்ஞகன்கிழக்கு மாகாணத்தில் இன்று தமிழினம் தனது இருப்பை‚ நிலத்தின் மீதான உரிமையை முழுமையாக இழந்துள்ளதுடன் கிழக்கில் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இன்று‚ 2009 மே மாதமளவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதபலம்  அழிக்கப்பட்ட பின்னர் வடபகுதியில் குறிப்பாக வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலம் சிங்கள இராணுவத்தாலும் சிங்களக் குடியேற்றத்தாலும் தொடர்ச்சியாகப் பல்வேறு வழிகளில் சூறையாடப்பட்டு வருகிறது.

காலங்காலமாக காணி அபிவிருத்தித் திட்டம் (Land Development Schemes) என்ற போர்வையில் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் சிங்களக் குடியேற்றத் திட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள். கிராம விரிவாக்கம்‚ இளைஞர் அபிவிருத்தி‚ விவசாய மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி‚ மீன்பிடி அபிவிருத்தி என்ற வெவ்வேறு பெயர்களில் தமிழர் மரபுவழித் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றினார்கள்.

  1. கல்லோயாக் குடியேற்றத் திட்டம்

தமிழர் தாயகத்தில் – கிழக்கு மாகாணத்தில் நிறுவப்பட்ட முதலாவது பாரிய சிங்களக் குடியேற்றம் கல்லோயாக் குடியேற்றமாகும். இதனை ஆரம்பித்து வைத்தவர் இலங்கையின் முதற் பிரதமர்  டி.எஸ்.சேனனாயக்க. இவர் 1931 முதல் 1947 வரை பிரித்தானிய ஆட்சிக்காலப்பகுதியில் விவசாய மற்றும் காணி அமைச்சராக இருந்தவர். தமிழர்கள் பூர்வீகமாய் வாழ்ந்து வந்த பட்டிப்பளை‚ களுவாஞ்சிக்குடி‚ மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களின் எல்லையில் உள்ள கிராமங்களை இணைத்து கல்லோயா என்று பெயரிட்டு கல்லோயா பள்ளத்தாக்கு சிங்களக் “கொலனி” 1949 இல் உருவாக்கப்பட்டது. பட்டிப்பளை என்ற புராதன தமிழ்க் கிராமத்தின் பெயரே கல்லோயா என்ற சிங்களப் பெயராக மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டது. இக் குடியேற்றங்களுக்காக சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் வெளிநாடுகளின் நிதியுதவி பெறப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசத்தில் 1949 – 1952 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தின் மூலம் 80‚000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். 1960 வரை இத்திட்டம் விஸ்திரிக்கப்பட்டது.

Vavuniya Barathypuram இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் - ஒரு வரலாற்று நோக்கு - பிஞ்ஞகன்கல்லோயா குடியேற்றத் திட்டம் இங்கினியாகல என்ற இடத்திலிருந்து ஆரம்பமாகிறது. இங்கு ஆரம்பத்தில் சிங்களவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுதொகையினரே இருந்தனர். 1952 ஜுலை 13 ஆம் திகதி இங்கிருந்த 100 இற்கும் அதிகமான தமிழ்க் குடும்பங்களை குடியேற்றத் திட்டத்திற்கு இடம்பெயருமாறு இராணுவத்தினர் வற்புறுத்தி அவர்களது வீடுகளை எரித்து அழித்தனர். ஆனால் அவர்கள் குடியமர மாற்று நிலம் எதுவுமே வழங்கப்பட வில்லை. அதே நேரம் சிங்களக் குடும்பங்களுக்கு தமிழர்கள் இருந்த இடம் குடியமர வழங்கப்பட்டதுடன் ஒவ்வோரு குடும்பத்திற்கும் ரூபா 10000 உதவித் தொகை வழங்கப்பட்டது.  67 வருடங்களுக்கு முன்னர் இது மிகப் பெரிய தொகையாகும். கல்லோயா குடியேற்றத்தைத் தொடர்ந்து திருகோணமலை கந்தளாயில் சிங்களக் கொலனி உருவாக்கப்பட்டது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பு வர இனவிகித அடிப்படையில் இங்கு தமிழர்களுக்கும் காணி வழங்கப்பட்டிருந்தது. 1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் உள்ள பழைய பாராளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பாகத் தமிழ்த் தலைவர்கள் சத்தியாக்கிரகம் செய்தனர். சத்தியாக்கிரகிகள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கொழும்பிலும் தமிழர்கள் வாழும் தென்னிலங்கையின் பகுதிகளிலும் மலையகப் பகுதியிலும் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் பரவின. 1956 இல் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின் முதல் இலக்காக கல்லோயா மற்றும் கந்தளாய்ப் பகுதியில் பூர்விகமாய் இருந்த மற்றும் குடியேறிய தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்.

தமிழினத்தின் மீது முதலாவது பாரிய இனப்படுகொலை இங்கினியாகலவில் ஜுன் 5‚ 1956 இல்  சிங்கள ஆயுதப் படைகளால் நிகழ்த்தப்பட்டது. கல்லோயத் திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையினராலும் ஆயுதப் படையினராலும் இங்கினியாகலவில் உள்ள கரும்புத் தோட்டத்திலும் தொழிற்சாலையிலும் வேலை செய்ய குடியேற்றப்பட்ட 150 தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் எரிக்கப்ட்டு தடயமின்றிச் செய்யப்பட்டார்கள். தாசி விதாச்சி தனது ‘அவசரகாலம் 58’ (Emergency 58) இல் இதனை விரிவாகப் பதிவு செய்துள்ளார். தடயங்களை அழித்தல் 2009 முள்ளிவாய்க்காலில் மட்டும் நிகழவில்லை. 1956 இலேயே ஆரம்பமாகிவிட்டது. 1996 செம்மணியில் அப்போதைய சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாக்கா 600 இற்கும் அதகமான தமிழ் இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதைகுழிகளை நள்ளிரவில் வாகன வெளிச்சங்கள் மூலம் தோண்டி எலும்புக் கூடுகளை அகற்றி தடயமே இல்லாமற் செய்தார்.

  1. இனக் கலவரங்ளும் அனுராதபுரத்திலிருந்து தமிழர் வெளியேற்றமும்

1956 ஐத் தொடர்ந்து 1958‚ 1977‚ 1978‚ 1981‚ 1983 என தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலும் மலையகப் பகுதியிலும் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட கலவரங்கள் தமிழர்களுக்கு உரிமையான நிலங்களையும் சொத்துக்களையும் அபகரிப்பதற்காக இனஅழிப்பை நோக்காகக் கொண்டு ஆயுதப்படைகளின் உதவியுடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. எல்லைக் கிராமங்களிலும் சிங்களவர் மத்தியிலும் வாழ்ந்த தமிழர்கள் இக்கலவரங்களின் போது நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து  வெளியேற்றப்பட்டார்கள்; பாதுகாப்பின்மை காரணமாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

black july இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் - ஒரு வரலாற்று நோக்கு - பிஞ்ஞகன்1983 ஆடிக்கலவரம் இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதை உணர்த்தியது. தமிழர்கள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேறி மேற்கு நாடுகளுக்கு புகலிடம் தேடிச் சென்றனர். 1983 இல் இலங்கையின் தலைநகரில் தொடங்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான வன்முறையில் 3000 இற்கும் அதிகமான தமிழர்கள் உயிரோடு எரித்தும் வெட்டியும் கொல்லப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இக்கலவரம் மலையகத்திற்கும் அனுராதபுரம் பொலநறுவை முதலான தமிழர் பிரதேசங்ளுக்கும் பரவியது.

இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றியபோது அனுராதபுரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தனர். ஆங்கில கப்பற் தலைவனான றொபேட் நொக்ஸ் (Robert Knox (8 February 1641 – 19 June 1720)) இலங்கையில் கிழக்கிந்தியக் கம்பனியின் வியாபாரத்தை முன்னெடுக்க வருகைதந்த போது கண்டி அரசனான இரண்டாம் இராஜசிங்கனின் காவலர்களால் கைது செய்யப்பட்டு கண்டி அரசின் கைதியாக 19 வருடங்கள் வாழ்கிறான். றொபேட் நொக்ஸ் கைதியாகவிருந்த போது சிங்கள மொழியைக் கற்றுக் கொள்கிறான். 19 வருடங்களின் பின் ஒருநாள் கண்டி இராச்சியத்திலிந்து தப்பி அனுராதபுரம் வழியாக வருகின்ற போது தான் கைதியாகவிருந்த போது கற்ற மொழியை விடுத்து வேறு ஒரு மொழியில் அப்பிரதேச மக்கள் உரையாடுவதையும் சிங்கள மொழியில் தான் பேசியதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையும் தனது வரலாற்றுக் குறிப்பில் எழுதியுள்ளான். அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்களை மலபார் என்று பெயரிடுகிறான். மலபார் என்பது தமிழர்களைக் குறிக்கும் சொல். 17 நூற்றாண்டு இலங்கையின் வரலாற்றைக் கூறும் முக்கிய ஆவணமாக “கிழக்கிந்தியக் கம்பனியின் இலங்கையுடனான வரலாற்றுத் தொடர்புகள்” (Knox, Robert (1681). An historical relation of the island Ceylon, in the East Indies. Printed by R. Chiswell.LCCN 15012033) என்ற நூல் விளங்குகின்றது. பிரித்தானியர் வருகைக்கு முன் அனுராதபுரதத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். 1983 கலவரத்துடன் தமிழர்கள் முற்றாகவே அனுராதபுரத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அனுராதபுரம் இலங்கையின் மிகப் பெரிய மாவட்டம். 2200 வருடங்களுக்கு முன்னர் மகாவம்சம் போற்றும் தமிழரசனான எல்லாளன் ஆட்சிசெய்த தமிழ்நிலம். தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த இடம். காலங்காலமாக மேற்கொள்ளப்பட்ட அரச ஆதரவுக் கலவரங்கள் மூலம் சிங்களவர்களின் கைக்குமாறியது.

  1. மட்டக்களப்பு – அம்பாறை இனப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

இலங்கை சுதந்திரமடைந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களின் சதவீதம் 3 மடங்கால் அதிகரிக்க தமிழர் மற்றும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மாற்றமின்றியிருந்தமையை புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன. 1963 இல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு முன்பாக 1961 இல் 7002 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 4500 சதுர கிலோமீற்றர் நிலமானது பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. 15000 சிங்களக் குடும்பங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட அம்பாறை  மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். அம்பாறை மாவட்டத்தில் தமிழரது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்த இரு நீர்ப்பாசனத் திட்டங்களும் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களது பயன்பாட்டுக்கே வந்தன.

1881 – 1981 வரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்ட குடிப்பரம்பல்களின் தரவு

Singala colonisation East இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் - ஒரு வரலாற்று நோக்கு - பிஞ்ஞகன்2007 இல் உள்ள தரவுகளின்படி அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகையில் 60 சதவீதமாக இருந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் 30 சதவீதமான நிலத்தையே உரிமையாகக் கொண்டிக்க சனத்தொகையில் 30 சதவீதமான சிங்களவர்கள் மாவட்டத்தின் 70 சதவீதமான நிலத்தை உரிமையாகக் கொண்டிருக்கின்றமையக் காணலாம்.

இன்று 2009 மே இற்குப் பின்னர்  அம்பாறையில் சிங்களவர்கள் முஸ்லீம்களின் காணிகளை அத்துமீறிக் கைப்பற்றி வர அங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் சிங்களவர்களை எதிர்க்காமல் தமிழர்களின் காணிகளைக் கைப்பற்றி வருகிறார்கள்.