‘இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் இணைந்தே தீர்வு’-செந்தில் தொண்டமான்

இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் இணைந்தே இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு தீர்வுகளை பெற்றுகொடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியின்போது செந்தில் தொண்டமான் இதனைக் குறிப்பிட்டார்.

கேள்வி: இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு தலைமைத்துவம் தற்போது இல்லாது போயுள்ளது. இனி இந்த மக்களின் நிலைமை என்ன?

பதில்: பொதுவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்திற்கு மட்டும் அல்ல. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கவசமாகவே ஆறுமுகன் தொண்டமான் இருந்தார். அவருடைய இழப்பு என்றைக்குமே ஈடு செய்ய முடியாத விடயம். ஆனால் அவர் காண்பித்த நல்வழியிலும் அவருடைய கொள்கைகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்பற்றி செயற்படும்.

கேள்வி: தொடர்ச்சியாக தலைமைத்துவம் குறித்து பிரச்சனை வருகின்றது. இருவர் அல்லது மூவரின் பெயர்கள் தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகின்றது. ஜனநாயக முறையில் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என நீங்கள் கூறுகின்றீர்கள். மக்கள் கூறுகின்ற நபரொருவர் தெரிவு செய்யப்படுவாரா அல்லது கட்சிக்குள் இருந்து ஒருவர் தெரிவு செய்யப்படுவாரா?

பதில்: மக்களின் பிரதிநிதிகளே கட்சியிலுள்ள அங்கத்தவர்கள். அங்கத்தவர்களின் பிரதிநிதிகளே தேசிய சபையில் இருக்கின்றார்கள். மக்களின் கருத்துக்களே அந்த இடத்தில் பிரதிபலிக்கும். அப்படியென்றால், 3 பேர் இருக்கலாம், 5 பேர் இருக்கலாம், 10 பேரின் பெயர் இருக்கலாம். எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவி ஜனநாயக முறையிலேயே தெரிவு செய்யப்படும்.

கேள்வி: கட்சியின் ஆரம்ப காலத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான். அதற்கு பிறகு ஆறுமுகன் தொண்டமான். இவர்கள் மக்களுக்கு வழங்கிய அதே சேவையை அடுத்த தலைமைத்துத்தினால் வழங்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதா?

பதில்: கட்சியின் கொள்கைகளையே சௌமியமூர்த்தி தொண்டமான் பின்பற்றியிருந்தார். அந்த கொள்கை ரீதியாக தான் சேவையும் செய்தார். அதே கொள்கையை ஆறுமுகன் தொண்டமான் முன்னெடுத்து செயற்படுத்தினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை பொருத்த வரை கட்சியின் கொள்கை பின்பற்றப்பட்டு அதில் ஒரு நூல் கூட மாறாமல் செயற்படுவோம்.

கேள்வி: தலைமைத்துவத்தை தாண்டி கட்சிக்குள் மேலும் பல பிரச்சனைகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது. இதன் உண்மை தன்மை என்ன?

பதில்: தலைவர் மறைந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகின்றன. அப்படி பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக எனது கவனத்திற்கு வந்திருக்கும். எனக்கு தெரிந்த வரைக்கும் அங்கு முறுகலோ அல்லது வேறுப்பட்ட கருத்துக்களோ இதுவரை பதிவாகவில்லை. அப்படி பதிவாகினால் கண்டிப்பாக விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொள்கை ரீதியில் முன்னின்று செயற்படும்.

கேள்வி: தலைமைத்துவம் அல்லது கட்சி மறுசீரமைப்பு இவ்வாறானதொன்று நடந்தால், அது எப்போது நடக்கும்?

பதில்: கட்சி மறுசீரமைப்புக்கு தேவை கிடையாது. ஏனென்றால் கட்சி தன்னுடைய பாதையில் தான் சென்றுக்கொண்டிருக்கின்றது. இலங்கையில் தற்போது கொரோனா பிரச்சனை இருக்கின்றது. அதேநேரம் தேர்தல் அறிவித்திருக்கின்றார்கள். இந்த இரண்டு முக்கியமான விடயங்களையும் கடந்ததன் பின்னர் தான் அடுத்தப்படியாக கட்சியின் செயற்திட்டங்கள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும். தலைவர் பதவிக்கு ஆறுமுகன் தொண்டமான் இன்னும் இருப்பதாக நாங்கள் நினைத்துகொண்டிருக்கின்றோம்.

கேள்வி: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

பதில்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொருத்த வரை நாங்கள் பல கொள்கைகளை வைத்திருக்கின்றோம். முதலில் சந்தா இல்லாத கட்சியாக இதனை மாற்ற வேண்டும். அந்த விடயத்தில் எங்கள் தலைவர் மிகவும் ஆசைப்பட்டார். இரண்டாவது எங்களது தலைவர் மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கவேண்டும் என ஆசைப்பட்டார். அதற்கான வேலைத்திட்டங்களை அவர் ஆரம்பித்திருந்தார். அந்த வேலைத்திட்டங்கள் விடுப்பட்ட இடத்திலிருந்து முன்னெடுத்து பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலயும் ஒருவர் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். அது கட்சி ரீதியாக தலைவர் உட்பட அனைவரது ஆசையும் அதுதான். மலையக மக்களுக்கு கட்டிக்கொடுக்கும் வீடுகள் கூரைகள் இல்லாமல், சிலேப் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். இவற்றை தவிர இன்னுமொன்று இருக்கின்றது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுகொடுத்தல். அரசாங்க ரீதியிலான வேலைவாய்ப்புக்களை பெற்றுகொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்கி அதனை பெற்றுகொடுப்போம்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் இந்த மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அரசாங்கத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். அரசாங்கத்துடன் இணைந்து மலையக மக்களுக்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் நாங்கள் வரும் காலங்களில் முன்னெடுப்போம்.

கேள்வி: கடந்த காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் கட்சிகளுடன் இணைந்துதான் தனது அரசியலை தொடர்ந்திருந்தது. இனிவரும் காலங்கள்?

பதில்: அதே கொள்கையை தான் முன்னெடுப்போம். ஏனென்றால் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் நாட்டின் ஜனாதிபதியாக முடியாது. பிரதம மந்திரியாகவும் முடியாது. வருகின்ற ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோருடன் சேர்ந்து செயற்பட்டால் மாத்திரம் தான், இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை பெற்றுகொள்ள முடியும். அது மட்டும் இல்லாமல் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அந்தந்த காலங்களில் உருவாக்கப்படும் பிரச்சனைகளுக்கு அரசாங்கத்துடன் இருந்தால் மாத்திரம் தான், அதற்கான உரிய தீர்வுகளை பெற முடியும்.

தீர்வை பெற்றுகொடுக்க முடியாமல், வெறும் விமர்சனங்கள் மற்றும் அறிக்கையை விடுவதனால் மாத்திரம் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. தீர்வை பெற்றுகொடுக்க வேண்டுமென்றால் நாங்கள் அந்த இடத்தில் இருக்க வேண்டும். தீர்வு வழங்கும் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் எங்களது ஆதரவு நிச்சயம் இருக்கும்.

கேள்வி: கடந்த காலங்களில் தீர்வை பெற்றுகொள்ள முடியாத சந்தர்ப்பங்களும் இருந்தன. தவறுகள் அதற்கான காரணங்களாக அமைந்திருக்கலாம். இவற்றை அடையாளம் கண்டு எவ்வாறு முன்னோக்கி செல்ல எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: தீர்வுகளை பெற முடியாத பிரச்சனைகளுக்கு மாற்று வழிகள் என்னவென்பதை யோசிக்கின்றோம். மாற்று வழிகளை அரசாங்கத்திற்கு முன்வைத்து கண்டிப்பாக தீர்வுகளை பெற்றுகொடுப்போம்.

நன்றி -பிபிசி தமிழ்