இந்தியா, இலங்கையின் நண்பன் என்பதை சிங்கள மக்களுக்கு உணர்த்த வேண்டும் – மனோ

இலங்கைக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் பிரதான தமிழர் கட்சிகள் மற்றும் தமிழர் பிரதிநிதிகளை வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரம் சந்திப்புக்களை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வந்த நிலையில், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் டக்ளஸ் தேவானந்தா, எஸ்.வியாழேந்திரன் ஆகியோ உட்பட இந்திய வம்சாவளி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் என அனைத்து தமிழ் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.

இந்நிலையில், இந்தியா, இலங்கையின் உண்மையான நண்பன் என்பதை சிங்கள மக்களுக்கு விளக்கி எடுத்துக்காட்ட வேண்டும் என தாம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பு குறித்து மனோ கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

“அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை தொடர்பிலான இந்தியாவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.

இலங்கையில் வெகு விரைவில் இனவாதம் இல்லாத இலங்கையை தமது கூட்டணி உருவாக்கும் என உறுதியளித்தோம். இதேவேளை, இராமேஸ்வரம் – மன்னார் – தூத்துக்குடி – கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்தோம்.

மேலும், மலையகத்திலுள்ள நுவரெலியா மற்றும் நோர்வூட் கிளங்கன் ஆகிய மருத்துவமனைகளுக்கு பி.சி.ஆர் இயந்திரங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.