இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் மலபார் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்

அமெரிக்கா, இந்தியா, யப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான மலபார் கூட்டு கடற்படைப் பயிற்சி பிராந்திய அமைதியை அச்சுறுத்தும் வகையில் இருக்காது என்று நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்திய, அமெரிக்க கடற்படைகள் இணைந்து 1992ஆம் ஆண்டு முதல் மலபார் அருகே கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 2007ஆம் ஆண்டு இந்தக் கூட்டுப் பயிற்சியில் யப்பான் முதன்முறையாக இணைந்து கொண்டதுடன், 2016ஆம் ஆண்டு நிரந்தரமாக இணைந்து கொண்டது.

தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கடற்படைக் கூட்டுப்பயிற்சியில் அவுஸ்திரேலியா இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தது.

லடாக் மற்றும் தென்சீனக் கடல் பகுதியில் அத்துமீறி செயற்படும் சீனாவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்த ஆண்டு தொடங்கியுள்ள பயிற்சியில் அவுஸ்திரேலியாவும், இந்தியாவும் இணைந்துள்ளது.

இந்த நான்கு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சி சீனாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளின் மலபார் கூட்டுப் பயிற்சி பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உகந்ததாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான முதல் கட்ட மலபார் பயிற்சி இன்று(03) வங்காள விரிகுடாவில், விசாகப்பட்டினம் கடலோரத்தில் ஆரம்பமாகியுள்ளது. இப்பயிற்சி எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. இரண்டாவது கட்டப் பயிற்சி, அரபிக் கடலில் நவம்பர் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.