‘இந்தியாவுக்கு கெடுதல் நினைத்தால் தக்க பதிலடி  படையினர் கொடுப்பர்’ – பிரதமர் மோடி

“இந்தியாவுக்கு யாரேனும் கெடுதல் நினைத்தால் இந்தியப் படையினர் தக்க பதிலடி கொடுப்பர்” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

ராஜஸ்தானில், ஜெய்சல்மீர் பகுதியில் உள்ள லாங்கேவாலாவில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியை கொண்டாடினார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

இந்நிலையில், இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி,

“இந்தியாவிற்கு யாரேனும் தீங்கு நினைத்தால் நமது படையினர் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பர். இது உலகிலேயே இந்திய இராணுவம் நம்பகத்தன்மை வாய்ந்த ஒன்று என்பதைக் காட்டுகிறது. இன்றைய அளவில் பிற பெரிய நாடுகளுடன் இந்திய இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட மூலோபாய கூட்டணியில் ஈடுபட்டுள்ளோம். பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியாவின் ஆயுதப் படைகள் எந்த நேரத்திலும் எந்த காலத்திலும் போராடும் என்பதை நிரூபித்துவிட்டார்கள்.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து மக்களை மீட்கும் பணியில் இந்திய விமானப் படை முன்னோக்கி இருந்தது. சில நாடுகளில் தங்களின் மக்களை மீட்க தவறிவிட்டனர் ஆனால் நமது மக்களை மீட்டு பிற நாடுகளுக்கு உதவி செய்த ஒரே நாடு இந்தியாதான்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் இந்திய ஆயுதப்படையினர் சிறப்பாக பணியாற்றினர். நாட்டில் முகக் கவசங்கள், சானிடைசர்கள், பாதுகாப்பு கவச உடைகள், மருத்துவ உபகரணங்கள், மற்றும் மருத்துவமனை வசதிகள் ஆகியவை மக்களுக்குச் சென்று சேர அரும்பணியாற்றினர்.” என்று தெரிவித்துள்ளார்.