இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா இலண்டன் செல்கிறார்…

தெற்காசியாவில் 17 கோடி மக்கள் வாழும் வங்கதேசத்தில் 15 ஆண்டு கால ஷேக் ஹசீனாவின் ஆட்சியை மாணவர்களின் ஒரு மாத கால போராட்டம் முடிவுக்கும் கொண்டுவந்துள்ளது.

கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உதயமானது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 300- பேர்வரையில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் போராட்டம் வெடிக்க காரணமாக அமைந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்தான் நீக்கியது. ஆனாலும், தொடர்ந்த போராட்டம் அரசுக்கு எதிரானதாக மாறி ஒரு கட்டத்தில் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரும் கிளர்ச்சியாக மாறிவிட்டது.

இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா லண்டனுக்கு புறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், வங்கதேச கலவரத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து வங்கதேசத்தின் முன்னணி வார இதழான `பிளிட்ஸ்’ ஆசிரியர் சலா உதின் சோகிப் சவுத்ரி எழுதிய தலையங்க கட்டுரையில் கூறியிருப்பதாவது:

வங்கதேச மாணவர்கள் போராட்டத்தை 157 பேர் ஒருங்கிணைந்து நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அல்-காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பிஎன்பி கட்சிக்கு முக்கிய தொடர்பு உள்ளது. பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர் டேவிட் பெர்க்மான் போராட்டத்தை தூண்டினார். பிரிட்டனுக்கு தப்பியோடிய பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரகுமான், அங்கிருந்து கொண்டு வங்கதேச போராட்டத்தை வழிநடத்தினார். இவர் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் ஆவார்.

வங்கதேச மாணவர் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும் இருக்கிறது. மாணவர்களின் பெயர்களில் ஏராளமான தீவிரவாதிகளும் களமிறங்கி, போராட்ட களத்தை போர்க்களமாக மாற்றினர் என்று மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளார்.