இந்தியாவை எதிர்க்கவில்லை : வடக்கு மீனவர்கள் விளக்கம்

வடக்கு மாகாண மீனவர்கள் இந்திய மீனவர்களின் வருகையை எதிர்க்கின்றார்களே தவிர இந்தியாவை எதிர்க்கவில்லை என்று வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகளுக்கு இடைச் இடம்பெற்ற சந்திப்புக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைபெற்றது.

இந்திய மீனவர்களின் வருகை தொடர்வதன் காரணமாக வடபகுதியில் உள்ள நான்கு மாவட்டங்களிலுமுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு தரப்பும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு பெரிய அளவிலான போராட்டத்தை யாழ் மாவட்டம் முன்னெடுத்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம் போராட்டத்தில் தலைமையை ஏற்றவர்கள் சிலர் கூறிய கருத்துக்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

“வடக்கு மாகாண மீனவர்கள் இன்று கூட இந்திய மீனவர்களின் வருகையை எதிர்க்கிறோமே தவிர இந்தியாவை எதிர்க்கவில்லை. உண்மையிலேயே இலங்கையில் தற்போது இருக்கின்ற நிலையை பார்த்துக் கொண்டால் பொருளாதார நெருக்கடியிலும் சரி அனத்த வேளையிலும் சரி இன்று வரை முதலாவதாக இந்தியாவே பங்களிப்பு செய்து வருகிறது” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நிவாரணமோ உதவியோ உட்கட்டுமானங்களோ இந்தியாவே பங்களிக்கிறது.  இலங்கையில் மீனவர்களுக்கு அப்பால் இருக்கின்ற மக்களின் தேவைகளை இங்கு இருக்கின்ற துணைத் தூதரகம் நிறைவேற்றி வருகிறது.
ஒரு சில நபர்களின் சொந்த கருத்தை இவ்வாறான பெரியளவிலான போராட்டங்களின் போது பயன்படுத்துவது நாங்கள் விரும்பவில்லை. இதை வட பகுதி மீனவர்களின் கருத்தாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை இவ்வேளை தெரிவிக்கிறோம் என்றும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.