இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – அச்சத்தில் மக்கள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்துள்ளனர்.  எனவே  இது வரையில் உயிரிழப்பு ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் முதல் அலை கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு முடிவுக்கு வருவதைப் போல இருந்தது.  மேலும்  டிசம்பர் இறுதியிலிருந்து மார்ச் மாதம் வரை சற்று இடைவெளி இருந்தது. குறிப்பாக பெப்ரவரி மாத மத்தியில் மிகவும் குறைந்திருந்தது.

ஆனால், மார்ச் மாத இறுதியிலும் ஏப்ரல் முதல் வார  ஆரம்பித்திலும்  கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

அதே நேரம் இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய் குறைபாடுகளுக்கு ஓக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், தங்களின் மருத்துவ குறைபாடுகளுடன் சேர்த்து, ஓக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பு  குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் ,

“அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் மகாராஷ்டிராவில்   568 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 306 பேரும், சத்தீஸ்கரில் 207 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 195 பேரும், குஜராத்தில் 135 பேரும், கர்நாடகாவில் 123 பேரும், ஜார்க்கண்டில் 106 பேரும்  தமிழ் நாட்டில் இது வரையில் 13,317 பேரும்   உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 இலட்சத்து 32 ஆயிரத்து 730 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் குணமடைவோர் சதவீதம் 83.92 ஆகக் குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தில் ஒரு கோவிட் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.