இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்தியது இலங்கை!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை மேம்படுத்துவதற்காக  இந்திய ரிசேவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகை   மீளச்செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT)  மேம்படுத்துவதற்கு இலங்கை, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகள்  இணைந்து முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கடந்த 2019ஆம் ஆண்டு செய்துகொண்டன.

இந்த நிலையில்  இந்த  ஒப்பந்தத்தை சமீபத்தில்  தன்னிச்சையாக இரத்து செய்த இலங்கை அரசு, தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக குறித்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதாகவும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை  மேம்படுத்தும் பணி இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்படும் என்றும்  அறிவித்தது.

ஆனால் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள இந்தியா, 2019ஆம் ஆண்டு மே மாதம் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.

இதையடுத்து இந்தியாவிடம் இருந்து  பெற்றுக்கொண்ட  ரூ. 3 ஆயிரம் கோடி கடன் தொகையை இலங்கை திருப்பி செலுத்தி உள்ளது என  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை மத்திய அரசின் ருவிட்டர் பதிவில்,   “இந்தியாவிடம் இருந்து பெற்ற கடன் தொகையை உரிய காலத்தில் அந்நாட்டு ரிசேவ் வங்கியிடம் செலுத்தப்பட்டு விட்டது.

இந்த தொகையை முன் கூட்டியே செலுத்தும்படி இந்தியாவிடம் இருந்து எந்த சிறப்பு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. இரு நாட்டு கூட்டு முயற்சிகள் எதிர் காலத்திலும் தொடரும்”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.