இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குப் பயணம்

இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை (4) இரவு 8.33 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழு பிரதமர் மோடியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கான வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் மோடிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

பேச்சுவார்த்தைகளின் நிறைவில் இருவராலும் கூட்டு ஊடக அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளது.