ஆறு கட்சிகளின் சந்திப்புகளும் அவிழும் உண்மைகளும் – கரிகாலன்

இலங்கை அரசியல் களத்தில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள், நிலங்கள் மற்றும் அரசியல் தீர்வு என்பன பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாத வினாக்களாகவே நீடித்து வருகின்றன. ஆட்சி மாறினாலும், ஆட்சியில் அமரும் தலைவர்களின் அணுகுமுறைகள் மாறினாலும், தமிழ் பேசும் கட்சிகளின் தலைமைகள் கையாளும் இராஜதந்திர உத்திகளும் அரசியல் நாடகங்களும் ஒரே பாணியிலேயே அரங்கேறி வருகின்றன.
அண்மையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழி லாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜன நாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற் போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் கோரிக்கை களை ஒன்றிணைந்த குரலில் முன்னிறுத்துவதாகக் கூறப்படும் இந்த 6 கட்சிகளின் கூட்டில், உள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசனோ அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனோ குறித்த சந்திப்புக்களில் பங்கேற்க வில்லை.
பிரதான தலைவர்கள் பின்னணியில் ஒதுங்கிக் கொள்ள, பிரதிநிதிகளை மட்டும் அனுப்பி நடத்தப்படும் இந்த அரைமனதுடனான கூட்டணிகள், தமிழ் பேசும் மக்களின் உண்மையான அபிவிருத்திக்கான கொள்கை சார்ந்த ஒன்றிணைவா அல்லது அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்கான வெறும் தற்காலிக நாடகப் பங்களிப்பா என்ற கேள்வியை வலுவாக எழுப்பியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பின் போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் தாமதமாகிவிட்டதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்ட போதிலும், அதை நிறைவேற்றுவதற்கான தெளிவான காலவரையறையயோ அல்லது வழிவரைபடத்தையோ வழங்கிவிடவில்லை. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என்ற பழைய பல்லவியையே அவர் மீண்டும் பாடியுள்ளார். அதேவேளையில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடனான சந்திப்பில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மிக முக்கிய கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. 2016-2018 ஆம் ஆண்டுகளில் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக் கப்பட்ட அரசியலமைப்பு வழிமுறைகள் மற்றும் அதன் இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே புதிய அரசியலமைப்புச் செயல்முறைகள் தொடரப்பட வேண்டும் என்ற மறைமுக அழுத்தம் இந்தியத் தரப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு இலக்கை அடைவதற்கான பாதையில் அரை வாசி தூரத்தைக் கடந்த பின்னர், அதைத் தூக்கி எறிந்து விட்டு பூச்சியத்திலிருந்து மீண்டும் தொடங்குவது புத்திசாலித் தனமானது அல்ல என்று இந்திய உயர்ஸ்தானிகர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது இதுவொரு புத்தி சாலித்தனமான இராஜதந்திர யோசனையாகத் தோன்றி னாலும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் ஆபத்துக்கள் மிக ஆழமானவை. இதில் முதலாவது, சுமந்திரன் தானாக ஏற்கனவே தயார் நிலையில் உள்ள இடைக்கால அறிக்கை விடயத்தினைக் கூறுவதை விடவும், ஏனைய தலைவர்களை யும் ஒருங்கிணைத்து ஒரு தளத்தில் அமர்த்திவிட்டு ‘குருநாதரான இந்தியாவை’ வைத்து கூற வைப்பது இலகுவானது என்பதை உணர்ந்து தான் அவர் அதற்கான காய்நகர்த்தலைச் செய்திருக்கின்றார். அதனடிப்படையில் தான் ஆறு கட்சிகளின் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பின்னர். 2016-2018 காலகட்டத்தில் எம்.ஏ.சுமந்திரனின் கணிசமான பங்களிப்பில் உருவாக்கப்பட்ட புதிய அரசிய லமைப்புக்கான செயற்பாட்டின் வழியில் தயாரிக்கப் பட்ட இடைக்கால அறிக்கையில், நாட்டின் தன்மை ‘ஏக்கிய ராஜ்ய’ ‘ஒருமித்த நாடு’ என்ற சிங்கள, தமிழ் மொழிகளுக்கிடையிலான வார்த்தை மாயாஜாலம் காணப்படுகின்றது. அதற்கான புதிய அர்த்தக்கற்பிதங்களை மீண்டும் மேலெழுப்பி தமிழ் மக்களின் இறைமையை முடக்கிப்போடும் ஒரு முயற்சியே இதுவாகும்.
ஒற்றையாட்சி முறைமையின் கொடூரமான பிடிக்குள் தமிழ் பேசும் மக்களை மீண்டும் அடகுவைத்து, பெயரளவில் மட்டும் சில அதிகாரப் பகிர்வுகளைக் காட்டும் இந்த இடைக்கால அறிக்கை முறைமை, தமிழ் மக்களின் சுயாட்சி உரிமையை முற்றாக நிராகரிக்கிறது.
இந்தியத் தரப்பும், தமிழ் அரசுக் கட்சியின் மிதவாதக் குழுவினரும் மீண்டும் இந்த இடைக்கால அறிக்கையை நோக்கியே நகர்வுகளைத் திருப்புவது, வரவிருக்கும் செப்டெம்பர் மாத ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் அநுர அரசாங்கத்திற்குப் சர்வதேச சமூகத்தின் முன் மீண்டுமொரு ‘பிணையெடுப்பை’ வழங்குவதற்கான மூலோபாய நகர் வாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
‘அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் முன்னெடுக் கப்படுகின்றன’ என்ற மாயையை உருவாக்கி, இலங்கை யைச் சர்வதேசப் பொறுப்புக்கூறலில் இருந்து காப்பாற்று வதற்கே இந்த ‘ஒருமித்த நாடு’ சூத்திரம் மீண்டும் கையில் எடுக்கப்படுகிறது என்பதை முதலில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
இத்தகைய சூழலில் தான், 6 தமிழ் பேசும் கட்சிக ளின் போலி ஒருமைப்பாட்டு நாடகத்திற்கு நேர்மாறாக, உண்மையான தமிழ் தேசிய அரசியலின் நிலைப்பாடு என்ன என்பது அம்பலமாகியுள்ளது. இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடனான சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த பகிரங்கமான கோரிக்கை, தமிழ் மக்களின் உண்மையான அபிலாசைகளைப் பிரதி பலிப்பதாக அமைந்திருந்தது.
இலங்கை அரசின் மீது இந்திய அரசு தனது இராஜதந்திர அழுத்தத்தைச் செலுத்தி, ‘ஏக்கிய ராஜ்ய’ என்ற ஒற்றையாட்சிச் சட்டத்தைக் திணிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், இலங்கையின் ஒற்றையாட்சி அரசிய லமைப்பு முறையை முற்றிலும் ஒழித்து, தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் தனித்துவமான இறைமையின் அடிப்படையி லான கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மிகத் தெளிவாக வலியுறுத்தினார்.
அத்துடன், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் வரலாற் றுச் தாயகப் பகுதிகளில், சுயாட்சி மற்றும் தன்னாட்சி யின் மூலம் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியலமைப்பு ஒழுங்கே உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டி னார்.
இக்கட்டான இந்த அரசியல் தருணத்தில், தமிழ் தலைமைகள் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. தமிழ் பேசும் கட்சிகள் என்ற பெயரில் முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகளுடன் இணைந்து குரல் கொடுப்பதற்கு முதலாக, தமிழ் தேசியக் கட்சிகள் கொள்கை ரீதியாக ஒன்றுபட வேண்டும்.
வெறும் ‘தமிழ் பேசும் கட்சிகள’ என்ற அடையா ளத்திற்குள் ஒளிந்துகொண்டு, ‘ஏக்கிய ராஜ்ய’ என்ற ஒற்றையாட்சி அமைப்பிற்குள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைக் கரைத்துவிட முனையும் தமிழரசுக் கட்சியின் வஞ்சக அரசியலுக்கு ஏனைய அமைப்புகள் பலியாகிவிடக் கூடாது. தமிழ் பேசும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது என்பது, வெறும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதோடு அல்லது சில ஏக்கர் காணிகளை விடுவிப்பதோடு முடிந்து விடும் விடயமல்ல. அது மக்களின் வரலாற்று ரீதியான நிலப்பரப்பு, இறைமை மற்றும் சுயாட்சியைப் பாதுகாக்கும் கொள்கை சார்ந்த போராட்டமாகும்.
மனோகணேசன், ரிஷாத் பதியுதீன் போன்ற பிரதான தலைவர்கள் முக்கியமான சந்திப்புகளைத் தவிர்த்து நழுவும் போக்கைக் கடைப்பிடிப்பதும், மறுபுறம் கூட்டணிகள் என்ற பெயரில் அரைவேக்காட்டு உடன்பாடுகளுக்குள் தமிழ் மக்களைத் தள்ளிவிடுவதுமான போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ் பேசும் கட்சிகளாகச் செயற்படுவதற்கு முன்னதாக, தமிழ் தேசியக் கட்சிகள் தங்களுக்குள் இதயசுத்தியான, கொள்கை சார்ந்த கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஒற்றையாட்சிக்குள் தங்களை முடக் கும் 2016-2018 இடைக்கால அறிக்கையை நிராகரித்து, ‘சுமஷ்டி- சுயாட்சி’ என்ற தெளிவான இலக்குடன் செயற்படாத வரை, அநுர அரசாங்கமும், சர்வதேசப் பங்காளிகளும் தமிழ் தலை மைகளைத் தங்கள் அரசியல் சதுரங்கத்தில் வெறும் பகடைக்காய்களாகவே தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.