22ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம் – சாணக்கியன்

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஊடாக நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கவோ, நீதிமன்ற கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தவோ  யோசனைகளை கொண்டு வந்திருந்தால் நாங்கள் அதற்கு முழுமையான ஆதரவு வழங்கியிருப்போம். ஆனால் அவற்றை விடுத்து அவசர அவசரமாக  இந்த திருத்தங்களை கொண்டு வந்திருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம். இந்த திருத்தத்தை ஜனாதிபதி முறையாக பயன்படுத்த வேண்டும். கடந்த கால அரசாங்கங்கள் நீதித்துறைக்கு எதிராக செயற்பட்டு நெருக்கடிக்குள்ளானதை மறக்க கூடாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை  இரத்துச் செய்வதாக  தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வாக்களித்திருந்தது. தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்து போது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்யும் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தக்கு கொண்டு வந்திருந்தார்.உண்மையில் அவருக்கு அந்த நோக்கம் இருந்திருந்தால் பதவிக்கு வந்தவுடன் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்யும் பிரேரணையை கொண்டு வந்திருக்க வேண்டும்.ஆனால்   அரசாங்கம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திருத்தங்களை கொண்டு வந்திருந்தால் அதில் உண்மை நோக்கம் உள்ளது என்று கருத முடியும். ஆனால் உயர்நீதிமன்றத்தின் 06 நீதியரசர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றதன் பின்னர் 07 ஆவது நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வுப்பெறும் தருணத்தில் சகல நீதிபதிகளினதும் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற்தை இலக்காகக் கொண்டு அரசாங்கம் இவ்விரு திருத்தங்களை கொண்டு வந்து அதனூடாக தமக்கு  தேவையான வகையில் தீர்ப்புக்களை பெற்றுக்கொள்ள நினைத்தால் அது அரசாங்கத்துக்கே எதிராக அமையும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஊடாக நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கவோ, நீதிமன்ற கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தவோ  யோசனைகளை கொண்டு வந்திருந்தால் நாங்கள் அதற்கு முழுமையான ஆதரவு வழங்கியிருப்போம்.ஆனால் அவற்றை விடுத்து அவசர அவசரமாக  இந்த திருத்தங்களை கொண்டு வந்திருப்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதனால் நாங்கள் இந்த திருத்தங்களுக்கு எதிராக வாக்களிப்போம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியானது கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் பிரஜாவுரிமையை  நீக்கும்  தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது எமது கட்சியின் தலைவரான அமிர்தலிங்கம் உட்பட ஏனைய தலைவர்கள் கொள்கையின் அடிப்படையில் அவரை பாதுகாத்தார்கள். பிரஜாவுரிமை நீக்கும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார்கள்.

2018 ஆம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக எமது கட்சியின் தலைவர் சம்மந்தன் தான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அரசாங்கங்கள் கொள்கை ரீதியிலும், அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்ட போது இலங்கைத் தமிழரசுக் கட்சி அதற்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.கொள்கைக்கு அமைவாகவே 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்து நாங்கள் தலைநிமிர்ந்து நடப்போம்.

இந்த நாட்டில் உயர்நீதிமன்றம், பிரதம நீதியரசர்களுக்கு எதிராக செயற்பட்ட அரசாங்கங்கள் பல உள்ளன. அரசாங்கங்கள் பெரும்பான்மையுடன் செயற்பட்டாலும் நீதியரசர்கள் சுயாதீனமாகவும் செயற்பட்டுள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க,  சரத் என் சில்வாவை பிரதம நீதியரசராக நியமித்தார், ஆனால் அவர் சந்திரிக்காவுக்கு எதிராகவும் தீர்ப்பளித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதம நீதியரசராக சிரானி பண்டாரநாயக்கவை நியமித்தார். ஆனால் பிரதம நீதியரசர், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எதிராக தீர்ப்பளித்தார். நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் கடந்த கால அரசாங்கங்கள் செயற்பட்டு நெருக்கடிக்குள்ளானதையும் குறிப்பிட வேண்டும்.
நாட்டு மக்களின் ஆணை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும்.அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் உள்ளது.ஆகவே இவ்விரு திருத்தங்களும் நிறைவேற்றப்படும்.இந்த திருத்தங்களை சிறந்த முறையில் ஜனாதிபதியால் பயன்படுத்த முடியும். இனி தான் அனைத்தும் ஆரம்பமாகும். ஆகவே  பெரும்பான்மை பலத்தை  அரசாங்கம் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.