ஆப்கான் இராணுவத்தளம் மீது தலிபான்கள் தாக்குதல்

கிழக்கு ஆப்கானில் உள்ள இராணுவத் தளத்தில் இன்று தலிபான்கள் தாக்குதலை மேற்கொண்டனர்.

இத்தாக்குதல் குறித்து ஆப்கான் இராணுவத் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியான பக்தியா மாகாணத்தில் உள்ள இராணுவத் தளத்தில் இன்று(01) தலிபான்கள் தாக்குதலை மேற்கொண்டனர். அத்துடன் காரில் வைக்கப்பட்ட குண்டை வெடிக்கச் செய்ததுடன் துப்பாக்கி ஏந்திய நபர்கள் இருவர் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர். இதற்குப் பதிலடியாக பாதுகாப்புத் தரப்பினரும் தாக்குதல்களை மேற்கொண்டனர். இருதரப்பிற்குமிடையே சண்டை பத்து நிமிடங்கள் வரையில் நீடித்தது. தற்போது அந்தப் பகுதி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலில் இராணுவத்தினர் பலர் காயமடைந்ததாகவும், இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவிற்குக் கொண்டுவரும் வகையில் ஆப்கான் அரசு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது.

பக்ரித் திருநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் போர்நிறுத்தத்திற்கு தலிபான்கள் ஒப்புக்கொண்டிருந்தனர். இதேவேளை ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவிற்குக் கொண்டுவர தலிபான்கள் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகின்றது. அத்துடன் ஐ.எஸ். தீவிரவாதிகளும் தாக்குதலிகளை நடத்தி வருகின்றனர்.