ஆணைக்குழு பரிந்துரைத்தாலும் பொது பலசேனாவுக்கு தடை இல்லை – அமைச்சர் பீரிஸ் உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பொதுபலசேனா அமைப்பைத் தடை செய்யுமாறு பரிந்துரைத்தபோதிலும் அந்தப் பரிந்துரையை நிராகரிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஆணைக் குழு அறிக்கையில் உள்ள சில பரிந்துரைகளை அமுல்படுத்துவது சிரமமாகும். விசேடமாக பொதுபலசேனா அமைப்பு குறித்த பரிந்துரையை அமுல்படுத்துவதானது கடினமாகும். அரசாங்கத்தின் விருப்பமும் அது குறித்து இல்லை. அந்த அமைப்பைத் தடை செய்வதால் நன்மை ஏற்படும் என்றல்ல. ஆகவே அரசாங்கம் அந்த அமைப்பை தடை செய்யாது.

ஆனால் கல்வி குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும். இனவாதச் சிந்தனைகள் பாட விதானங்களில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நீக்கவேண்டும். மத்ரஸ நிலையங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை கல்வி அமைச்சு அனுமதிக்கின்றது” என்றார்.