அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் உயிரிழக்கும் அகதிகள்

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் சுகாதார நிலை மிக மிக மோசமானதாக இருக்கிறது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 சதவீத அகதிகள் மன நலச்சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதுவரை இத்தடுப்பிலிருந்த 24 அகதிகள் உயிரிழந்திருக்கின்றனர், அதில் 14 பேர் தற்கொலை செய்து கொண்டவர்கள்.

இந்நிலையில் ஐ.நா. அகதிகள் சாசனத்தில் கையெழுத்திட்ட நாடாக உள்ள அவுஸ்திரேலியாவில், ஒரு காலத்தில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படும் முறை என்பது பல நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்தது. 1977ல் அகதிகளை மீள்குடியமர்த்துவதற்கான மீள்குடியேற்ற திட்டம் உருவாக்கப்பட்டது முதல் இதுவரை 8 லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் மீள்குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

இன்றைய நிலையில், படகு வழியாக தஞ்சம் கோரும் அகதிகளை மிக மிக கடுமையான முறையில் கையாளும் நாடாக அவுஸ்திரேலியா இருக்கிறது. அந்த வகையில், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இன்று அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை அகதிகளுக்கு நம்பிக்கையற்றதாக உள்ளது.