அல்லலாடும் அமெரிக்காவின் ஒப்பந்தம் – பின்னனியில் இந்தியா?

சிறீலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா நோர்வேயின் உடன்பாட்டில் கையெப்பமிட்டதுபோல நாம் அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்போவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறிலங்கா அமைச்சர் டலஸ் அழகப்பெருமா கடந்த வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவின் புதிய அரச தலைவர் அமெரிக்காவின் உடன்பாட்டில் கை-யெப்பமிடப்போவதில்லை. விடுதலைப்புலிகளுடன் போர் நிறுத்த உடன்பாட்டில் ரணில் கையொப்பமிட்டது யாருக்கும் தெரியாது. அது தொடர்பில் நாடாளுமன்றத்திற்கோ அல்லது மக்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை.

எனவே கோத்தபயா அமெரிக்காவின் உடன்பாட்டில் தன்னிட்சையாக கை-யொப்பமிடமாட்டார். அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதங்களை மேற்கொண்ட பின்னரே முடிவு எடுக்கப்படும். தேவையேற்படின் உடன்பாட்டில் மாற்றங்களும் மேற்கொள்ளப்படும்.

அமெரிக்காவின் உடன்பாட்டை நிராகரிப்பதா அல்லது ஏற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. அமெரிக்காவின் உடன்பாட்டை யாரும் முழுமையாக படிக்கவில்லை.

முன்னைய அரசு வெளியிட்ட அமெரிக்காவின் உடன்பாடு தொடர்பான ஆவணத்தில் பல பக்கங்கள் காணாமல் போயிருந்தன. ஆனால் நாம் அதனை முழுமையாக வெளியிடவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, புதிய அரசு அமெரிக்காவின் எந்த உடன்பாட்டிலும் கை-யொப்பமிடவில்லை என சிறீலங்கா அரசு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மிலேனியம் சலஞ், சோபா உடன்பாடு, ஏசிஎஸ்ஏ உடன்பாடு ஆகிய 3 உடன்பாடுகளிலும் சிறீலங்கா அரசு கையொப்பமிடவில்லை என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உடன்பாட்டுகளுக்கு எதிராக தென்னிலங்கை மருத்துவர் சங்கப் பிரதிநிதிகள், பௌத்த துறவிகள் மற்றும் சட்டவாளர்கள் வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.

வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மார்ச் 25 ஆம் நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் உடன்பாட்டை செயற்படுத்த விடாது தடுப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் மிலேNனியம் சலஞ் நிதிக்கு இணையான நிதியை இந்தியா சிறீலங்காவுக்கு வழங்கியுள்ளதுடன், கோத்தபாயா அரச தலைவராக வருவதை இந்தியாவே ஆதரித்ததாக அவை மேலும் தெரிவித்துள்ளன.