கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி குறித்த 6 பேரும் வழக்கு நிறைவடையும் வரை வைத்தியர் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிடுவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், குறித்த 6 பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதாரப் பணியாளர்கள் தொடர்பான நியமன விவகாரம் மற்றும் அவர்களின் உடை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலை பணிப்பாளர் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான மற்றும் தடைசெய்யப்பட்ட கருத்துகள் பதிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, வைத்தியர் சுகுணன், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ஹரீஸ் உள்ளிட்டோருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



