யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை காவல்துறையினர் எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என்று கோரியும் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது நாளாக இன்றைய தினம் (29) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக இன்றைய தினம், பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தியாக தீபத்தின் நினைவாலயம் பகுதியில் தியாக தீபத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாள் நிகழ்வான கடந்த 15ஆம் திகதி சிலை வைக்கப்பட்டு, தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, கடந்த சனிக்கிழமை (26) இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) நினைவாலயத்திற்கு யாழ்ப்பாண தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர், இரண்டு வாகனங்களில் வந்து சிலையை அங்கிருந்து பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினரால் சிலை எடுத்து செல்லப்பட்டதை கண்டித்தும், மீள அந்த சிலையை அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என்று கோரி தொடர் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.



