திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் சந்திரசேகரை சாடிய வேலன் சுவாமிகள்

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவிடத்திலிருந்து திலீபனின் திருவுருவச்சிலையை அகற்றியது மாநகர சபை அல்ல இலங்கை காவல்துறையினர் என்று தெரிந்தும் அமைச்சர் சந்திரசேகர் பொய் கூறுவதாக வேலன் சுவாமிகள் கடுமையாக விமர்சித்துள்ளார்.

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் உருவச்சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் கருத்துரைத்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“தியாக தீபத்தின் திருவுருவச்சிலை அகற்றப்பட்டமைக்கு யாழ்.மாநகர சபைக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தான் காரணம் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவர் பட்டப் பகலில் பச்சைப் பொய்யை கூறி இலங்கை அரசின் தமிழின விரோத போக்கை மறைப்பதற்காக திட்டமிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார்.

தியாக தீபத்தின் உருவச்சிலையை அகற்றியது அநுர தலைமையிலான அரசாங்கத்தின் காவல்துறையினர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இவ்வாறான ஒரு நிலையில் சிலை விவகாரத்தை திசை திருப்புவதற்காக தமிழ் கட்சிகள் இடையே பிளவை ஏற்படுத்துவதற்காக அமைச்சர் சந்திரசேகர் திட்டமிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார்” என்று வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

அகிம்சையை போதித்த திலீபனின் சிலையை அகற்றத் துணிந்த அநுர அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கான சம உரிமையை வழங்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழர் பகுதிகளில் இராணுவத்தின் நினைவுச் சின்னங்களும் உருவச் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களுக்காக தனது இன்னுயிரை நீத்த அகிம்சாவாதிக்கு உருவச்சிலை அமைப்பது தவறா? என்றும் அவர் தெரிவித்தார்.

மாநகர சபையினுடைய அதிகாரத்தை சிறீலங்கா காவல்துறையினர் கையில் எடுத்தமை சட்டவிரோதமான செயல் அதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆகவே சிங்கள பௌத்த மேலாதிக்கத்தில் செயல்படும் அநுர தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மதித்து தியாக தீபத்தின் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்