அரசை வீழ்த்த வெளிப்படையாக திட்டத்தை முன்னெடுக்க நேரிடும் – சுமந்திரன் அறிவிப்பு

“கோவிட் -19 வைரஸ் இடர் காலத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அரசாங்கம் செய்யும் முறையற்ற ஆட்சியை உடனடியாக நிறுத்தவேண்டும். அரசாங்கம், தமது தவறுகளை உடனடியாக திருத்திக்கொள்ளாது போனால், அதனை ஆட்சிப் பீடத்திலிருந்து வீழ்த்தும் அனைத்து வேலைத் திட்டத்தையும் சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து வெளிப்படையாகவே முன்னெடுப்போம்”, என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும், தெரிவித்தவை வருமாறு,

கோவிட் 19 நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் மிக மோசமாகியுள்ளன. மக்கள் குறித்து எந்தவித அக்கறையும் இல்லாது ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். அது மட்டுமல்லாது, தடுப்புக்காவலில் உள்ளவர்கள் கொல்லப்படும் நிலை உருவாகியுள்ளது. மிக மோசமான மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளன. இவற்றுக்கு மத்தியில் கோவிட் நிலைமைகளை உபயோகித்து தமக்கு ஏற்ற வகையில் நிலைமைகளை கையாள்கின்றயால் பெரும் மனித உரிமைகள் மீறலையும் அரசாங்கம் செய்து வருகின்றது.

இவ்வாறான செயல்பாடுகளால் அரசாங்கம் மக்களின் செல்வாக்கை முற்று முழுதாக இழக்கும் நிலை உருவாகியுள்ளது என்பது தெளிவாக விளங்குகின்றது. எனவே, எதிர்கட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாம், ஏனைய பிரதான எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எச்சரிக்கையை விடுக்கின்றோம். அரசாங்கம் சரியான முறையில் ஆட்சி செய்யவில்லை.

இது மக்கள் ஆட்சியெனவும் ஜனநாயக குடியரசு எனவும் சமத்துவ குடியரசு எனவும் எமது அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள போதிலும் இதற்கு பொருந்தாத ஆட்சியை அரசாங்கம் செய்கின்றது. எனவே இது தொடருமானால் அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் இருந்து வீழ்த்தும் அனைத்து வேலைத்திட்டத்தையும் வெளிப்படையாக முன்னெடுப்போம். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், ஜே.வி.பியின் தலைவர் ஆகியோரும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனாலேயே நாமும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

மேலும், குடும்ப ஆட்சி இருக்கவே கூடாது. ஒரு குடும்பத்தில் இருவர் ஆட்சியில் இருந்தாலே அது நல்லாட்சி தத்துவத்திற்கு மாறானது. ஆனால், இங்கே பதினாறு, பதினேழு அமைச்சுக்கள் ஒரே குடும்பத்தின் கையில் உள்ளன. ஆகவே, இந்த குடும்ப ஆட்சி தொடரக்கூடாது. குறிப்பாக இந்த இடர் காலத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்கள் செய்யும் முறையற்ற ஆட்சி நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.