அயோத்தியில் இருந்தது இராமர் கோவிலா, பாபர் மசூதியா? நீதிமன்றத் தீர்ப்பு விரைவில்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில், அயோத்தி நகரில் குறிப்பிட்ட ஒரு பகுதி நிலத்தை மையமாகக் கொண்டது அயோத்தி நிலத் தகராறு வழக்கு. இந்த இடம் 2.77 ஏக்கர் அளவைக் கொண்டது. அதாவது இரண்டு கால்ப்பந்து மைதானத்தின் அளவு எனக் கூறப்படுகின்றது.

முதலாவது முகலாய மன்னரான பாபர் என்பவர் 1528இல் இங்கிருந்த குழந்தை இராமர் கோவிலை இடித்து விட்டு அதன் மேல் மசூதி ஒன்றைக் கட்டினார் என இந்துக்களால் நம்பப்படுகின்றது. இந்த மசூதிக்கு “பாப்ரி மசூதி” என பெயர் சூட்டினர். 1528 தொடக்கம் 1853 வரை இது இஸ்லாமியர்களின் தொழுகைக்கான இடமாகக் காணப்பட்டது. இம் மசூதி “ராமவின் கோட்டை” எனப்படும் மலையில் அமைந்துள்ளது.

விஷ்ணுவின் அவதாரமான ராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் கருதப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது பிரதான சர்ச்சையாக உள்ளது. தாங்கள் வழிபடும் ராமர் பிறந்த இடம் அந்த மசூதி உள்ள இடம்தான் என்றும், 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆக்கிரமித்த முகலாயர்கள் அங்கிருந்த இந்துக் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாகவும் இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. இஸ்லாமியர்களோ, இது தங்களின் மசூதி என்றும் கோரி வருகின்றனர். இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த மசூதி தொடர்பான சர்ச்சை இருந்து வருகிறது.

Aiyoyhi2 அயோத்தியில் இருந்தது இராமர் கோவிலா, பாபர் மசூதியா? நீதிமன்றத் தீர்ப்பு விரைவில்இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி இருந்த போது இந்த மசூதி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு அவர்கள் ஓர் தீர்வை வழங்கினர். அதில் இந்த மசூதியை இரண்டாகப் பிரித்து, அதில் ஒரு பகுதியை இராமர் கோவிலாகவும், மற்றைய பகுதியை மசூதியாகவும் வழிபடுமாறு கூறி, இக்கோவில் ஒரே சுவரினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்றதும்  இந்தப் பிரச்சினை மீண்டும் தோன்றியது. இந்தப் பிரச்சினையை அப்போதைய அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். இதில் முக்கியமாக எல்.கே.அத்வானியைக் குறிப்பிடுகின்றனர். இந்த பாபர் மசூதி இடித்தழிக்கப்பட்டதன் பின்னணியில் இவரே இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்தியத் தொல்லியல்துறையினர் பிரச்சினைக்குரிய, இராமர் பிறந்ததாகக் கூறப்படும் இடத்தையும், பாபர் மசூதி இருக்கும் நிலத்தையும் 1970, 1992, மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்ததில்,  பாபர் மசூதிக்கு முந்தைய காலத்து தொன்மையான கட்டிடங்கள்,  பாபர் மசூதிக்கு கீழும், பக்கவாட்டிலும் இருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டெடுத்தனர்.

Aiyoyhi3 அயோத்தியில் இருந்தது இராமர் கோவிலா, பாபர் மசூதியா? நீதிமன்றத் தீர்ப்பு விரைவில்அரசியல் ரீதியாக மிகவும் உணர்வலைகளை எழுப்பக்கூடியதாக இருக்கும் இந்தச் சர்ச்சையில் மூன்று தரப்பினருக்கு ஈடுபாடு உள்ளது. இரண்டு தரப்பினர் இந்து அமைப்புகளாகவும், மூன்றாவது தரப்பு முஸ்லிம் தரப்பாகவும் உள்ளது. இந்த மூன்று தரப்பினருமே நீதிமன்ற உதவியை நாடினர்.

நிர்மோஹி அக்காரா என்ற இந்து அமைப்பு 1959ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முஸ்லிம்கள் தரப்பில் சன்னி வக்பு வாரியம் 1961ல் வழக்கு தொடர்ந்தது. ராம் லீலா விரஜ்மன் என்ற இந்து அமைப்பு 1989ல் நீதிமன்றத்தை நாடியது. மூன்று தரப்பினருமே இந்த 2.77 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

பின்னர் 1992 டிசம்பர் 6ஆம் திகதி 150,000 இந்துக்களால் ஒரே நாளில்,    இந்த பாபர் மசூதி இடித்து அழிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மதக்கலவரம் மூண்டது. இதில் இரு தரப்பிலிருந்தும் 2,000இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இதன் பின்னரே முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.

இதன் எதிரொலியாகவே 1993 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி மும்பைக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்றும், இதற்கும் முஸ்லிம் தீவிரவாதிகளே காரணம் என சொல்லப்பட்டது.

மசூதி இடிக்கப்பட்டதன் பின்னர் நிலத்துக்கு உரிமை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கின் தீர்ப்பு 2010 செப்டம்பர் 30ல்  வழங்கப்பட்டது. தீர்ப்பில் மூன்று கேள்விகளுக்கு விடை அளிக்கப்பட்டிருந்தது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்றும், அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும், அந்தக் கட்டடம் இஸ்லாமிய கோட்பாடுகளின்படி இல்லை என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பின்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்றில் ஒரு பகுதி ராம் லல்லா அமைப்புக்கும், இன்னொரு மூன்றில் ஒரு பகுதி நிலம் சன்னி வக்ஃபு வாரியத்துக்கும், மீதி மூன்றில் ஒரு பகுதி நிலம் நிர்மோஹி அகாரா அமைப்புக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ராமர் பிறந்ததாக ராம் லல்லா விர்ஜமன் அமைப்பு குறிப்பிடும் பகுதி அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது. இந்த இடம் ஏற்கெனவே பாபர் மசூதி இருந்த இடமாகும். சர்ச்சைக்குரிய பகுதியின் உள்பகுதியாக இது உள்ளது. வெளிப்பகுதி நிர்மோஹா அக்காராவுக்கும், அதற்கும் வெளியில் உள்ள பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும் அளிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, அந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்ட முடியும் என்று இந்துக்கள் நம்பினர். ஆனால் அங்கு மீண்டும் மசூதி கட்டப்பட வேண்டும் என்று அப்போதும் இஸ்லாமியர்கள் கோரினர்.

2010 தீர்ப்பை எதிர்த்து இந்து மற்றும் முஸ்லிம் குழுக்கள் மேல்முறையீடு செய்ததை அடுத்து 2011ல் அந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

பல ஆண்டுகளாக இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருந்தது. ஆனால், இந்தப் பிரச்சினையில் தீர்ப்பு கூறுவதற்கான நேரம் நெருங்கிவிட்டதைப் போலத் தெரிகிறது.

உச்சநீதிமன்றத்தில் 2011 ஆம் ஆண்டில் விசாரணை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு,  இதுகுறித்த வழக்கை, உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக 45 நாட்கள் விசாரித்து கடந்த புதன்கிழமை (அக்டோபர் 16) விசாரணையை நிறைவு  செய்தது.

இதற்கிடையில், 2019 மார்ச் 08இல் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இராம ஜென்ம பூமி பிணக்குகளை, நீதிமன்றத்திற்கு வெளியே, பாக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் மூத்த வழக்கறிஞர் சிறிராம் பஞ்சு மற்றும் வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு சமரசக் குழுவை நியமித்தது. இக்குழு எட்டு வாரங்களுக்குள் தமது அறிக்கையை உச்ச நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சமரச தீர்வுக்கான இந்தக் குழு ஆகஸ்ட் 1 ஆம் திகதியே நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று இதில் தொடர்புடைய மூன்று தரப்பினருமே நம்புகின்றனர்.

இதனால், நாட்டில் அரசியல் சூழ்நிலை பரபரப்பாக மாறியுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், மாநில அரசு அயோத்தியில் 144 தடை உத்தரவை அமுல்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் ராமர் ஆலயம் கட்டப் போவதாக பல இந்து அமைப்புகள் வாக்குறுதி அளித்துள்ளன. கட்டப்படவுள்ள கோவிலில் நிறுவுவதற்காக சிற்பங்களைச் செதுக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

மூன்று தரப்பினரின் விவாதங்களின் அடிப்படையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல்சாசன அமர்வு, தீர்ப்பு அளிக்கவுள்ளது. தீர்ப்புக்கான திகதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்   65 வயதை பூர்த்தி செய்வதால், நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு இரு தினங்களுக்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1949 ஆம் ஆண்டில் இருந்து நீடித்து வரும் ராமர் கோவில் – பாபர் மசூதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இந்தத் தீர்ப்பு அமையக்கூடும்

. “அது ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், முந்தைய நாள் சனிக்கிழமை உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதாலும், 2019 நவம்பர் 4 முதல் 15 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அயோத்தி நிலத் தகராறு குறித்த வழக்கில் நவம்பர் 4 முதல் 15 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வெளியகும் என நாம் எதிர்பார்க்கலாம்” என்று முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கே.சி. கௌசிக் தெரிவித்தார்.

நவம்பர் 17ம் தேதிக்குள் தீர்ப்பளிக்க தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தவறிவிட்டால், புதிதாக அமைக்கப்படும் அமர்வு இந்த வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டியிருக்கும். அது சீக்கிரம் நடக்க வாய்ப்பிருக்காது.

உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைவராக இருப்பார். அதில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய். சந்திரசூட், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் உள்ள ஒரே இஸ்லாமியராக நீதிபதி நஸீர் உள்ளார்.

“ஆகஸ்ட் 6 ஆம் தேதியில் இருந்து, இந்த வழக்கை தினமும் நீதிபதிகள் விசாரித்து வருவதால் தீர்ப்பையும் இவர்கள் அளிப்பது தான் உகந்ததாக இருக்கும்” என்று சர்வதேசப் புகழ் பெற்ற வழக்கறிஞரான டாக்டர் சூரத் சிங் தெரிவித்தார்.

. இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் என்ன நடக்கும்?  ராமர் கோயில் கட்டும் வாய்ப்பு இரண்டு இந்து அமைப்புகளில், அதாவது ராம் லல்லா மற்றும் நிர்மோஹி அகாரா அமைப்புகளில் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி நீடிக்கும்.

அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் இந்து அமைப்புகளுக்குள் ஒருமித்த கருத்து உள்ளபோதிலும், கோயிலை யார் கட்டுவது என்பதில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

வில் வைத்திருக்கும் ராமர் சிலையைத் தான் நிறுவ வேண்டும் என்று நிர்மோஹி அமைப்பு வலியுறுத்துகிறது. ஆனால் ராம் லல்லா விர்ஜமான் அமைப்பை ஆதரிப்பதவர்கள், ராம் லல்லா சிலை 1949ல் இருந்து அங்கு உள்ளது என்றும், அதனால் குழந்தை ராமர் சிலை தான் அங்கு நிறுவப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

“இரண்டு இந்து அமைப்புகளுமே தீர்ப்பு குறித்து மிகவும் நம்பிக்கையுடன் உள்ளன. இந்தப் பிரச்சினை நாடு முழுவதிலும் எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாக இருப்பதால், இதில் அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் மிக முக்கியமான பங்கு உள்ளது. இந்தப் பிரச்சினையில் நிறைய பேர் நீண்ட காலமாக அரசியல் ஆதாயம் தேடி வந்திருக்கிறார்கள்.

அடுத்த மாதம் 13இலிருந்து 15இற்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, தீர்ப்பு வெளியானால் 134 ஆண்டுகளிற்கு முன் தொடங்கப்பட்ட இந்த வழக்கு முடிவிற்கு வரும் எனவும் நிம்மதியடைகின்றனர். அயோத்தி தீர்ப்பால் நாட்டில் எந்தப் பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்பதற்காக மத்திய, உள்துறை அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

ஏற்கனவே, அயோத்தியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி தொடர்பாக, ‘டிவி’க்களில் விவாதம் நடத்தவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. துணை இராணுவ படையும், அயோத்திக்கு அனுப்பப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சக உத்தரவை ஏற்று, தமிழக அரசும், மாநிலம் முழுவதும், அனைத்து கோவில்களையும், மசூதிகளையும், கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவர, காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, செந்தூர்,  பழநி, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், சென்னையில் உள்ள கோவில்கள் மசூதிகள் உட்பட முக்கிய இடங்களில்  பாதுகாப்பை அதிகப்படுத்தும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.