அமைதி பேச்சுக்கு புதின் ஒப்புக் கொண்டால் ரஷ்ய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும்: பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு அதிபர் புதின் ஒப்புக் கொண்டால், ரஷ்ய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவது குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. அது இன்னும் தொடர்கிறது. இந்தப் போர் காரணமாக, உலகளாவிய பொருளாதாரத்தில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகள் இடையே அமைதி பேச்சுவார்த்தை ஏற்படுத்தி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் முயற்சிக்கின்றன.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் டி.வி.யில் ஆற்றிய உரையில், ‘‘நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதங்களை குவித்து வருகின்றன. இது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என ரஷ்ய அதிபர் புதின் கருதுகிறார்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு அதிபர் புதின் ஒப்புக் கொண்டால், ரஷ்யாவுக்கு தேவையான பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலிக்க வேண்டும்’’ என்றார்.