அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று; அரசியலமைப்புத் திருத்தம் குறித்து ஆராயப்படும்

புதிய அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறும். இதன்போது, 19ஆவது திருத்தம் பற்றியும், அரசமைப்பில் செய்யவேண்டிய திருத்தங்கள் பற்றியும் ஆராயப்படவுள்ளதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

புதிய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதா அல்லது புதிய பட்ஜெட்டை உருவாக்குவதா என்பது குறித்தும் இதில் ஆராயப்படும் என்று அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

அரசமைப்பின் கீழ், பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வுக்கு மூன்று மாதங்கள் வரை தற்போதுள்ள அரச நிதியைப் பயன்படுத்த ஜனாதிபதி அனுமதிக்கப்படுகிறார். புதிய அரசின் பட்ஜெட் குறித்து விவாதங்கள் நடைபெறும்போது இந்த காரணியும் கவனத்தில் கொள்ளப்படும். எவ்வாறாயினும், அமைச்சரவைக் கூட்டத்திற்கு இன்னும் ஒரு திட்டவட்டமான நிகழ்ச்சி நிரல் அமைக்கப்படவில்லை என்றார்.