13 ஆம், 19 ஆம் திருத்தங்களில் அரசு கை வைத்தால் எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்; மனோ

தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு என்ற அசுரபலத்தினைப் பயன்படுத்தி 13ஆம், 19ஆம் அரசியல் யாப்புத் திருத்தங்களை மோசமாக மேற்கொள்ளுமாக இருந்தால் அதன் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –

“13ஆம், 19ஆம் அரசியல் யாப்புத் திருத்தங்களில் அரசாங்கம் கைவைக்கக் கூடாது. அந்தத் திருத்தங்கள் மீது கை வைப்பதாக இருந்தால் அவற்றை இப்போது உள்ளதை விட இன்னமும் சிறப்புற மாற்றுவற்காக இருக்க வேண்டுமே தவிர அதனை அழிப்பதாக இருக்கக்கூடாது.

வெறுமனே நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு தாம் நினைக்கின்ற அனைத்தையும் செய்துவிட முடியும் எனத் தற்போதைய அரசாங்கம் நினைக்கின்றது. அதுபோலவே கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் தமக்கு இருக்ககூடிய பெரும்பான்மையை வைத்துக் கொண்டு சிலவற்றை மேற்கொண்டனர்.

1956ஆம் ஆண்டு இருந்த அரசாங்கம் தன்னிடம் இருந்த பெரும்பான்மையை பயன்படுத்தி தனிச் சிங்களச் சட்டத்தினை கொண்டுவந்தது. அதன் பிற்பாடு நாடு பாரிய யுத்தத்தினை சந்தித்தது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். நாட்டினுடைய பொருளாதாரம் அதல பாதாளத்தினுள் சென்று இன்னமும் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய முடியாமல் நாடு தவிக்கின்றது.

நாடாளுமன்றத்தில் தலைகளின் எண்ணிக்கையில் பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு எதனையும் செய்யலாம் என நினைத்தால் அது முட்டாள்தனம். ராஜபக்ஷக்கள் கடந்த கால வரலாற்றுப் படிப்பினையை மனதில் கொண்டு செயற்படுவார்கள் என நம்புகிறேன்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினுடைய பெயர் பலகையில் உள்ள தமிழ் மொழியில் இருந்த எழுத்துப்பிழை திருத்தப்பட்டதை பலர் பெரிதாக பேசுகின்றனர். இது ஒரு சிறிய விடயம். இதனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சமூக ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கின்றனர். அந்தளவிற்கு தமிழ் இனம் தரமிறங்கிப் போய்விட்டது.

அரச பெயர்ப் பலகைகளில் மும்மொழிகளுக்கும் முக்கியத்துவமளித்து அவற்றில் எழுத்துப்பிழைகள் ஏதேனும் இருந்தால் அதனை திருத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும். அதனை பெரிதுபடுத்தத் தேவையில்லை” என்றார்.