அமேசான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஜெஃப் பெசோஸ் அந்த பதவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ் விலகும் பதவியை அமேசானின் மேகக்கணினியக வணிகத்தை வழிநடத்தி வரும் ஆண்டி ஜாஸ்ஸி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அமேசானின் தலைமை செயலதிகாரியாக இருப்பது முக்கிய பொறுப்பு. இதுபோன்ற பொறுப்புகளில் இருக்கும்போது மற்ற விடயங்களில் கவனம் செலுத்துவது என்பது மிகவும் கடினமானது.

அமேசானின் நிர்வாக தலைவராக, நிறுவனத்தின் முக்கிய முன்னெடுப்புகளில் நான் தொடர்ந்து இணைந்திருப்பேன். அதே சூழ்நிலையில், எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ள டே 1 பண்ட், பெசோஸ் எர்த் பண்ட், ப்ளூ ஆரிஜின், தி வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவதற்கான நேரம் கிடைக்கும்.

இதுவரை இவ்வளவு ஆற்றல் இருந்ததாக உணர்ந்ததில்லை. மேலும், இது ஓய்வுபெறுவது குறித்தானது அல்ல. இந்த நிறுவனங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து நான் மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன்”  என்று பெசோஸ் தெரிவித்துள்ளார்.