அமெரிக்க அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மைக் பொம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் மார்க் எஸ்பர் ஆகியோர் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இச்சந்திப்பில், அமெரிக்க அதிபரின் வாழ்த்துக்களை அவர்கள் இந்தியப் பிரதமரிடம் தெரிவித்தனர். அமெரிக்க அதிபருக்கும், பரஸ்பர வாழ்த்தைத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பெப்ரவரியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் பயணம் வெற்றிகரமாக அமைந்ததையும் நினைவுகூர்ந்தார்.

அமெரிக்கா – இந்தியா இடையே இன்று நடந்த 2 + 2 இருதரப்புக் கூட்டம் ஆக்கபூர்வமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது என பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அமைச்சர்கள் தெரிவித்தனர். தொலைநோக்கு மற்றும் இலக்குகளை அடைய இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதிலும், இணைந்து செயற்படுவதிலும் அமெரிக்க அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டுவதாக அவர் கூறினார்.

2 + 2 கூட்டம் வெற்றிகரமாக முடிந்ததை பிரதமர் பாராட்டினார். சமீப ஆண்டு காலமாக இருதரப்பு உறவில் வளர்ச்சி மற்றும் சர்வதேச யுக்திகளில் இணைந்து செயற்படுவது திருப்தி அளிப்பதாகவும் பிரதமர் கூறினார். மேலும் இரு நாடுகளிடையேயான மக்கள் உறவு மற்றும் நம்பிக்கை வலுவடைந்ததையும் சுட்டிக்காட்டினார்.