அமெரிக்க அதிபர் தேர்தல்: இன்று முடிவுகள் வெளியாகும்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் வாக்குப் பதிவுகள் நடைபெற்று வரும் இவ்வேளையில், ஏற்கனவே 10கோடி பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். மேலும் ஆறு கோடி பேர் நேரில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிபர் பதவிக்காக குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உம், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் துணை அதிபர் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்தத் தேர்தலில் அதிக வாக்குப் பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் ட்ரம்ப் மற்றும் பிடனுக்கு இடையே கடும் போட்டியும், இழுபறியும் இருக்கும் எனக் கூறப்படுகின்றது. கடந்த 2016இல் நடந்த தேர்தலில் 13.89கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இதில் 4.70 கோடி பேர் மட்டுமே தபால் வாக்குகளை அளித்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், தபால் மூலமாக வாக்களிக்க அனைத்து மாகாணங்களிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9.40கோடி பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். இது கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்கு அதிகமானதாகும்.

அமெரிக்காவில் மொத்தம் 23.9 கோடி மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். அதில் 67 சதவீதம் பேர் அதாவது 16கோடி பேர் வாக்களிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே 10கோடி பேர் வாக்களித்துள்ள நிலையில், மேலும் ஆறுகோடி பேர் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி 04ஆம் திகதி அதிகாலை வரை வாக்குப் பதிவுகள் நடக்கும்.

முன்பு நடந்த தேர்தல்களில் முடிவுகள் தெரிவதற்கு சில வாரங்கள் கூட ஆனது உண்டு. இந்திய நேரப்படி இன்று(04)  இரவிற்குள் யார் முன்னிலையில் உள்ளார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளலாம். மொத்தமாக உள்ள 538 தொகுதிகளில் 270இற்கும் அதிகமான தொகுதிகளை பெறுபவரே அதிபராக முடியும்.