‘தண்டனை விலக்கீட்டை முடிவுறுத்து, உண்மையை உயிர்ப்பித்திரு’-பி.மாணிக்கவாசகம்

உண்மைகள் சாவதில்லை. ஆனால் சாகா வரம் பெற்ற உண்மையை வெளிக்கொண்டு வருபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள், கடத்தப்படுகின்றார்கள், கொல்லப்படுகின்றார்கள். நாகரிகம் வளர்ச்சி அடைந்துள்ள போதிலும் வாழ்வியலில் இது மிக மோசமான உலகளாவிய நிலைமையாகத் திகழ்கின்றது.

தகவல்களை – உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வது மக்களின் பிறப்புரிமை. அந்த உரிமையை நிறைவேற்றுவதற்காக ஊடகவியலாளர்கள் உழைக்கின்றார்கள். அவர்கள் உண்மைகளையும் உள்ளவாறாக நிலைமைகளையும் வெளிக் கொண்டு வருவதற்குப் பாடுபடுகின்றார்கள். அதனை அவர்கள் தமது வாழ்வியலாக – தொழிலாகக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்களும், அநியாயங்களைச் செய்பவர்களும், அநீதி இழைப்பவர்களும் அவர்களை ஆட்டிப் படைக்கின்றார்கள். இதனால் ஊடகவியலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். அவர்கள் தமது கடமைகளைச் செய்வதில் இருந்து தடுக்கப்படுகின்றார்கள். அவர்களின் உரிமை – வாழ்வுரிமை இதனால் மறுக்கப்படுகின்றது. இது ஊடக சுதந்திரத்துக்குக் கேடு விளைவிக்கின்றது. கருத்துச் சுதந்திர மறுப்பாகின்றது.

ஊடக சுதந்திரம் என்பது, மிக முக்கிய ஜனநாயக உரிமையாக வரையறுக்கப்பட்டிருக்கின்றது. அது ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று. ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பதற்கு நான்கு தூண்களும் அவசியம். அதில் ஒன்று பாதிக்கப்பட்டாலும், அல்லது ஒன்றை வீழ்த்தினாலும் ஜனநாயகம் நிலைகுலைந்து விடும். அங்கு சர்வாதிகாரமும், அநீதியும், அட்டூழியங்களும் தலைதூக்குவதற்கு வாய்ப்பாகி விடும்.

ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டு, சர்வாதிகாரம் இடம் பிடித்த பல உலக நாடுகளில் இந்த உண்மை பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கின்றது.

ஊடக அடக்குமுறை என்பது, இன்று பெரிய அளவில் பேசப்படுகின்ற ஒரு அனைத்துலகப்  பிரச்சினையாகப் பரிணமித்திருக்கின்றது. ஊடக சுதந்திரத்திற்காகவும், ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும் ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஜனநாயகத்தின்பால் பற்றுடையவர்கள் என பலதரப்பட்டவர்களும் போராடுகின்றார்கள். இந்தப் போராட்டம் காலம் காலமாகத் தொடர்கின்றது.

அதிகாரத்தில் உள்ளவர்களும், ஆட்சியாளர்களும், சக்தி படைத்தவர்களும் ஊடகவியலாளர்களை எதிரிகளாக நோக்குகின்ற போக்கில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்ற ஊடகவியலாளர்களை அடக்கிவிட வேண்டும், அழித்துவிட வேண்டும் என்பதே அவர்களுடைய நிலைப்பாடு. இதனால் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் சர்வதேச அளவில் பரந்துபட்ட ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது.

சிறந்த ஊடவியலாளர்கள் வருடந்தோறும் புலிட்சர் என்ற உயர்ந்த விருது வழங்கி  கௌரவிக்கப்படுகின்றார்கள். ஒவ்வொரு வருடமும் ஊடகவியலாளர் ஒருவர் இந்த உயர்ந்த கௌரவத்தைப் பெற்றுக் கொள்கின்றார். ஆனால் வருடந்தோறும் நூறு ஊடகவியலாளர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகின்றார்கள் என்று யுனெஸ்கோ என்ற ஐ.நாவின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் கூறுகின்றது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டிய அதேவேளை, ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்களைத் தாக்கி அவர்களுக்கு எதிரான குற்றச்செயல்களைப் புரிபவர்கள் தண்டனை பெறுவதில் இருந்து தப்பிக் கொள்கின்றார்கள். அவ்வாறு தப்பிக் கொள்பவர்கள் தொடர்ந்து ஊடகத்துறைக்கு அச்சுறுத்தலாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனையொட்டி ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றத் தண்டனை விலக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் வருடந்தோறும் நவம்பர் 2 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

‘தண்டனை விலக்கீட்டை முடிவுறுத்து’, ‘உண்மையை உயிர்ப்பித்திரு’ என்ற மகுட வாசகங்களை தாரக மந்திரமாகக் கொண்டு இந்தத் தினம் ஒலிக்கின்றது. கடந்த 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையிலான 14 வருடங்களில் செய்திகளை அறிக்கையிட்டு, பொதுமக்களுக்குத் தகவல்களை வெளிக் கொண்டு வந்த 1200இற்குக் கிட்டிய எண்ணுக்கணக்கைக் கொண்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது சரசாரியாக நான்கு நாட்களில் ஒரு கொலை என்ற வீதமாகும்.

ஊடகவியலாளர்களின் பத்தில் ஒன்பது மரணச் சம்பவங்களில் கொலைகாரர்கள் தண்டிக்கப்படாமல் போயிருக்கின்றனர். இத்தகைய தண்டனை விலக்கீட்டு நிலைமையானது, மேலும் மேலும் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுத்திருக்கின்றது. அத்துடன் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதித்துறை கட்டமைப்புக்கள் சிதைவடைவதற்கும், முரண்பாடுகள் மோசமடைவதற்குமான அறிகுறியாக இது காணப்படுவதாக ஐ.நா சுட்டிக்காட்டி உள்ளது.

இலங்கையிலும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தமிழ் ஊடவியலாளர்கள் 35 பேர் வரையில் கொலையுண்டிருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. யுத்த காலத்தில் மட்டுமல்லாமல், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரும்கூட ஊடகவியலாளர்களும், ஊடகத்துறை சார்ந்தவர்களும் தாக்கப்படுவது தொடர்கின்றது.

ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்படுவதாகவும் ஆட்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஊடகவியாளர்களை அவர்களுடைய செயற்பாடுகளுக்காகப் பாராட்டுகின்றார்கள். ஆனால் அவர்களுடைய உரிமைகளும், சுதந்திரமும் உரிய முறையில் பேணப்படுவதில்லை. இதனால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு நீதி கோரிய போராட்டங்கள், ஊடக சுதந்திரத்துக்கான சர்வதேச தினத்தன்றும், ஊடகவியாளர்கள் தாக்கப்படும் போதும், அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படும் தருணங்களிலும் நடத்தப்படுகின்றன. இது ஒரு தொடர்கதையாகவே நிகழ்கின்றது.

தண்டனை விலக்கீட்டை ஓர் உரிமையாகவே இலங்கையின் ஆட்சியாளர்கள் பேணி வருகின்றார்கள். அதிகார பலத்தைப் பயன்படுத்தி, அரசியல் சுயநலன்களுக்காக எதனையும் எப்படியும் செய்யலாம் என அவர்கள் செயற்படுகின்றார்கள். மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி அரசோச்சுகின்ற பேரின அரசியல்வாதிகள் அனைவருமே தண்டனை விலக்கீட்டு உரிமை சார்ந்து, அரசியல் நலன்களை சுகபோகமாகக் கொண்டிருக்கின்றார்கள். நிறைவேற்றதிகாரம் கொண்ட  ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் 20 ஆவது அரசியல் திருத்தச் சட்ட நிறைவேற்றத்தின் மூலம் குவிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து ஊடக சுதந்திரம் மேலும் மோசமடையலாம் என்ற அச்ச நிலைமையே காணப்படுகின்றது.

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதனால், குற்றச்செயல்கள், ஊழல்கள், மனித உரிமை மீறல்கள் மூடி மறைக்கப்படுகின்றன. ஜனநாயகமும் கேள்விக்கு உள்ளாகின்றது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களில் காணப்படுகின்ற தண்டனை விலக்கீட்டு நிலைமைகளினால் சமூகங்கள் பெரிதும் பாதிக்கப்படுவது குறித்து யுனெஸ்கோ நிறுவனம் கரிசனை கொண்டிருக்கின்றது. சட்டம், ஒழுங்கை நிலைநிறுத்துவது குறித்து அக்கறையுள்ள  அரசுகள், சிவில் சமூகங்கள், ஊடகம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டனை விடுபாட்டினை முடிவுறுத்துதற்கான அனைத்துலக முயற்சியில் இணைந்து கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு அழைத்திருக்கின்றது.

நாளுக்கு நாள் வளர்ந்து செல்கின்ற தண்டனை விடுபாட்டு நிலைமையின் தீவிரத்தையும், அதன் விளைவுகளையும் இனம் கண்ட ஐ.நாவின் பொதுச்சபை 2013ஆம் ஆண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்ற தண்டனை விலக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நவம்பர் 2ஆம் திகதியை சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தியது.

இரண்டு பிரஞ்சு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நினைவையொட்டி இந்த நாள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதேவேளை, சர்வதேச ஊடக சுதந்திர தினம் மே மாதம் 3ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுட்டிக்கப்படுகின்றது.

மனிதாபிமானம் தொடர்பில் எட்டப்பட்டுள்ள இலக்குகளை வலுப்படுத்துவது, உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் ரீதியான விருப்பையும் அதற்கான வளங்களையும் திரட்டுவது, கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவூட்டுவது போன்ற செயற்பாடுகளுக்கு இத்தகைய சர்வதேச தினங்கள் உரிய தருணங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.'தண்டனை விலக்கீட்டை முடிவுறுத்து, உண்மையை உயிர்ப்பித்திரு'-பி.மாணிக்கவாசகம்'தண்டனை விலக்கீட்டை முடிவுறுத்து, உண்மையை உயிர்ப்பித்திரு'-பி.மாணிக்கவாசகம்