அமெரிக்கா மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் – ரஷ்யா மீது சந்தேகம்

அமெரிக்கா மீது மிகப்பெரியளவில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில்   ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

ஒரு பெரிய சைபர் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை, அமெரிக்க அதிகாரிகள் இந்த வாரம் கண்டுபிடித்தனர்.

இந்த தாக்குதலால், அமெரிக்காவின் அரசு முகமைகள், முக்கிய அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆபத்தில் இருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க கருவூலம் மற்றும் வணிகத் துறையும் இந்த சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டது.

இந்த சைபர் தாக்குதலைத் தடுப்பது மிகவும் சிக்கலானது என, அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்புப் பாதுகாப்பு முகமை (சி.ஐ.எஸ்.ஏ) கூறியுள்ளது.

மேலும் மிக நுட்பமான, தொடர் தாக்குதல் இது எனவும், இந்த சைபர் தாக்குதலில் அமெரிக்காவின் அரசு முகமைகள், முக்கிய அரசு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், சி.ஐ.எஸ்.ஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சி.ஐ.எஸ்.ஏ அமைப்போ அல்லது எஃப்.பி.ஐ அமைப்போ, இதுவரை யார் இந்த தாக்குதலை நடத்தியது என்ற தகவலைக் குறிப்பிடவில்லை. அனால் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், ரஷ்யாவை சந்தேகிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து “சைபர் துறையில், எந்த ஒரு தாக்குதல் நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை” என அமெரிக்காவில் இருக்கும் ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.