அமெரிக்காவில் மூளையைத் தாக்கும் அமீபா நோய்

அமெரிக்க, புளோரிடா மாகாணத்தில் மூளையை தாக்கும் அரிய வகை அமீபா நோய் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

நெக்லேரியா பவுலேரி (Naegleria fowleri) என்ற நோய்த் தொற்று மூலம் இந்த நோய் ஏற்படுகின்றது. இந்த நோயானது நேரடியாக மூளையிலுள்ள திசுக்களைத் தாக்கும் என்றும் உயிரிழப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இது பற்றி தகவல் வெளியிட்டுள்ள இணையத்தளம் ஒன்று, இந் நோயானது ஏரி, குளம் ஆகியவற்றில் வாழும் அமீபா மூலம் பரவுகின்றது என்றும், அந்த அமீபா மூக்கின் வழியாக உடலிற்குள் செல்கின்றது என்றும் கூறியுள்ளது. மேலும் உடலுக்குள் செல்லும் அமீபா நேரடியாக மூளைப் பகுதிக்குள் செல்வதாகவும், அங்கு செல்லும் அமீபாக்கள் நெக்லேரியா பவுலேரி வகையான தொற்றை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் உள்ள குழாய், குளம், ஏரி ஆகியவற்றில் உள்ள நீரில் மக்களின் நாசி தொடர்பு கொள்ளா வண்ணம் எச்சரிக்கையாக இருக்கும் வண்ணம் சுகாதாரத்துறை கேட்டுள்ளது.