அமெரிக்காவில் ஐ.நா சபையின் முன்னே எழுகதமிழ் : அணிதிரள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு !

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எழுச்சி நிகழ்வாக தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ‘எழுகதமிழ்’ எழுச்சி நிகழ்வுக்கு சமாந்திரமாக அமெரிக்காவிலும் ‘எழுகதமிழ்’ எழுச்சி நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.

எதிர்வரும் செப்ரெம்பர் 16ம் நாள் யாழப்பாணம் முற்றவெளியில் தாயக மக்களின் எழுகதமிழ் இடம்பெற இருக்க, நியு யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு முன்னே, புலம்பெயர் தமிழர்களின் எழுகதமிழ் இடம்பெற இருக்கின்றது.

இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இடம்பெற இருக்கின்ற இந்த எழுச்சி நிகழ்வில் அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும்.
– தமிழர்களின் அரசியற் தீர்வுக்கு சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும்.
– இலங்கைத்தீவில் தமிழர் தாயகப்பகுதியில் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை உள்ளடக்கியுள்ள நியு யோர்க் எழுகதமிழ், தமிழர் தாயகத்தில் முன்வைக்கப்படுகின்ற ஆறு அம்ச கோரிக்கைகளையும், அனைத்துலக சமூகம் நோக்கி முன்வைக்கவுள்ளது.

1. எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

2. சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்கு நிலை மாற்றப்பட்டு உடனே சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

3. தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் யாவரும் சர்வதேச சட்டக் கொள்கைகளுக்குப் புறம்பான சட்டமொன்றினால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.

4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெற வேண்டும்

5. வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்.

6. இடம்பெயர்ந்த எம் மக்கள் அனைவரும் அவரவர்களின் பாரம்பரிய காணிகளில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்

ஆகிய கோரிக்கைகள் தமிழர் தாயகத்தில் முன்வைக்கப்படுகின்றன.

நியுயோர்கில் இடம்பெறுகின்ற எழுகதமிழ் நிகழ்வில் கனடாவில் இருந்து போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாகவும், இது தொடர்பிலான தகவல்களை கனடா நா.தமிழீழ பணிமனையின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.