அரசாங்கத்தின் வலுவான பேரினப் பொருளாதார கொள்கையின் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது என்று இலங்கைக்கான ஜப்பானின் பதில் தூதுவர் கமோஷிதா நவோகி தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் அநுராதபுர மாவட்டத்தில் சுமார் 67,000 குடும்பங்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்க எதிர்பார்ப்பதுடன், மக்கள் நீண்டகாலமாக நாள்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் பலன்களை மிக விரைவாக உள்ளூர் சமூகத்திற்கு வழங்குவதற்காக, எமது இலங்கைத் தரப்பினருடன் தொடர்ந்து பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஜப்பான் ஒரு நிலையான பங்காளியாகத் தொடர்ந்து செயல்படுவதால், இந்தத் திட்டம் ஒரு பாரிய அடையாளமாக அமைந்துள்ளது. இலங்கை தனது கடனைச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, ஜப்பானால் வழங்கப்பட்ட சலுகைக் கடனுதவியின் கீழ் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டம் சில காலம் நிறுத்தப்பட வேண்டியிருந்தது என்பது உண்மையே. எவ்வாறாயினும், இலங்கை எமது ஒரு முக்கியமான பங்காளியாக இருப்பதனால், ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து இருதரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவிற்குத் தலைமை தாங்கி, அரச கடன் மறுசீரமைப்பு மீதான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தது.
அக்குழுவிற்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான உடனே, 2024 ஜூலை மாதத்தில் இத்திட்டத்திற்கான நிதியை விடுவிப்பது உட்பட, தற்போது நடைமுறையிலுள்ள சலுகைக் கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்த முதல் நாடு ஜப்பானாகும். சர்வதேச நிதிச் சந்தையில் இலங்கை நம்பிக்கையைப் பெறுவதற்கு, தற்போது நடைமுறையிலுள்ள இச்சலுகைக் கடன் திட்டங்கள் மிகவும் முக்கியமானவையாகும். எனவே, இத்திட்டத்தின் செயல்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.



