அதிகரிக்கும் கொரோனா – போராட்டத்தை கைவிட விவசாயிகளிடம் வலியுறுத்தல்

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும்   போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 1,68,912  பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் தற்போது வரையில், 1,35,27,717 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து, 1,70,179 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத், தொடர்ந்து மத்திய அரசுடன்  பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,   கடந்த ஜனவரி 22ஆம் திகதி எங்குப் பேச்சுவார்த்தையை விட்டோமோ அதே இடத்திலிருந்து மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க தயாராகவுள்ளோம்.

ஆனால் மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு உடனடியாக இயற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகளில் எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை” என்று அறிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், டெல்லியில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.