அதிகரிக்கும் கொரோனா: பிரேசிலில் அதிபரை எதிர்த்து போராட்டம்

பிரேசிலில் கொரோனா தொற்று பரவலை சரியாக கையாளவில்லை என அதிபர் போல்சினாரோ அரசுக்கு எதிராக மக்கள்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா  வைரஸால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளில் பிரேசிலும் ஒன்று. பிரேசிலில் 1.6 கோடி பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

உலக அளவில்  கொரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் , பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்  34 இலட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில், நாடாளுமன்றத்திற்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் போல்சினாரோ பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும்,போதுமான தடுப்பூசிகள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ரியோ டி ஜெனிரோ உட்பட பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

போல்சினாரோ கொரோனா தொற்றைக் கையாண்ட விதம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஏற்கனவே எழுந்துள்ளன.