அகதித் தஞ்ச விண்ணப்பங்களை இரு பிரிவுகளாக வகைப்படுத்தும் பிரீதி பட்டேலின் சர்ச்சைக்குரிய குடிவரவுத்திட்டம் – தமிழில் ஜெயந்திரன்

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான சாசனத்தில் ஐக்கிய இராச்சியம் 1951 இல் ஒப்பமிட்டதிலிருந்து, போரிலிருந்தும், பல்வேறு துன்புறுத்தல்களிலிருந்தும், பயங்கரவாத தாக்குதல்களிலிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகத் தமது சொந்த நாடுகளை விட்டு வெளியேறி, எமது நாட்டைத்தேடி வந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அவர்கள் இங்கு குடியிருப்பதற்கான ஒரு வாய்ப்பை எமது நாடு வழங்கியிருக்கிறது. தாம் செலுத்த வேண்டிய வரிகளை ஒழுங்காகச் செலுத்தி, எமது சமூகத்துக்குப் பாரிய பங்களிப்பை வழங்கி, மாண்புமிக்க குடிமக்களாக அவர்கள் தற்போது விளங்குகிறார்கள். உண்மையில் இந்தக் கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் தேசிய சுகாதார சேவைகளில் (NHS) பணியாற்றியவர்கள் இவ்வாறாக அகதிகளாக எமது நாட்டுக்கு வந்தவர்கள் என்பது நாம் நினைவிற் கொள்ள வேண்டிய விடயமாகும்.

இந்த சாசனத்தின் 70ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூருகின்ற இத்தருணத்தில் எமது பாதுகாப்பை நாடிநிற்கின்ற அகதிகளை வரவேற்பதன் மூலமே இந்த நிகழ்வை நாம் உரிய முறையில் கொண்டாட முடியும். ஆனால் இதற்குப் பதிலாக உள்நாட்டுச் செயலரான (Home Secretary) பிரீதி பட்டேல் அவர்களோ ஏனைய ‘பாதுகாப்பான நாடுகள் ஊடாக’ பிரித்தானியாவுக்குள் நுழைகின்ற அகதிகளின் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் ‘சட்டபூர்வமான பாதைகள்’ என்று அழைக்கப்படும் மீள்குடியேற்றத் திட்டங்களின் ஊடாக இந்த நாட்டுக்குள் வரும் அகதிகளுக்கு இந்த நாட்டிலே வாழ்வதற்கு உரிய அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த அகதிகள் பிரித்தானியாவுக்கு எப்படிப்பட்ட பாதை ஊடாகப் பயணஞ்செய்திருக்கிறார்கள் என்பதை வைத்துக்கொண்டு அந்த தீர்மானத்தின் அடிப்படையில் போரிலிருந்தும் பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்தும் தப்பி வருகிறவர்களில் யாருக்கு இங்கு தஞ்சம் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவை மேற்கொள்வது உண்மையான அகதிகளுக்கு அநீதி இழைப்பதாகவே அமையும்.

தமது பாதுகாப்புக்காக அசாதாரண வழிமுறைகளை நாடுகின்ற மிகச் சாதாரண மனிதர்களே இந்த அகதிகள். அவர்களது உயிருக்கு இருக்கின்ற ஆபத்து மிகப்பெரிதாக இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் மிக விரைவாகவே தமது சொந்த இடத்திலிருந்து வெளியேறி வேறு எங்காவது தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இதைவிட அவர்களுக்கு வேறு எந்தத் தெரிவுமே இல்லை. பிரித்தானியாவில் பாதுகாப்பைத் தேடுவதற்காக சில வேளைகளில் மனிதர்களை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்ல உதவுபவர்களுக்கு (people smugglers) மிகப்பெரிய தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இருக்கிறது.

‘குடியேற்றத்துக்கான புதிய திட்டத்தின் நோக்கம்’ என்ற பகுதியில் குறிப்பிடப்படுவது போல மனிதர்களை ஏனைய நாடுகளுக்குக் கொண்டு செல்கின்றவர்களை உண்மையில் இந்த அரசு தோற்கடிக்க வேண்டுமானால், போதுமான அளவு பாதுகாப்பான பாதைகளை அகதிகளுக்குத் திறந்து விட வேண்டும். அப்படிச் செய்யும் பட்சத்தில் பாதுகாப்பைத் தேடுபவர்கள் ஆபத்தானவர்களின் கைகளில் அகப்பட்டு தமது உயிரையோ அன்றேல் அவயவங்களையோ இழக்க வேண்டிய நிலைமை ஏற்படாது.

சிரியாவைச் சீர்குலைத்த உள்நாட்டுப் போரின் காரணமாக இடம்பெயர்ந்த 20,000 பேரை கடந்த ஐந்து வருட காலத்தில் பிரித்தானியா ஏற்றுக்கொண்டிருக்கிறது. உண்மையில் இது ஒரு மிகச் சிறிய எண்ணிக்கையாகும். ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தல் தொகுதியிலும் ஒவ்வொரு வருடமும் ஆறு பேரை எடுப்பதற்கு இது சமனானது. உண்மையிலேயே பாதுகாப்பைத் தேடுபவர்களுக்கு உதவுவதில் இந்த அரசு இதயசுத்தியுடன் உதவ விரும்பினால், அதிகமான அகதிகள் இங்கு வருவதற்கான பல பாதைகளை அவர்கள் திறந்துவிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கையை 125,000 ஆக பைடன் தற்போது உயர்த்தி இருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.  அதே நேரத்தில் ஒருவருக்கு உண்மையில் பாதுகாப்பு தேவை என்ற விடயத்துக்கும் அவர் எந்த வழியாகப் பிரித்தானியாவுக்குள் நுழைகிறார் என்பதற்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். முறையான மற்றும் பாதுகாப்பான ஒரு வழிமுறையினூடாக நாட்டுக்குள் நுழைவது எல்லோருக்கும் சாத்தியமாகாது. எடுத்துக்காட்டாக சிம்பாப்வே நாட்டில் வாழுகின்ற மக்கள் அரசை எதிர்ப்பார்களானால், அவர்கள் துன்புறுத்தப்படுவார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழலில் அவர்கள் தலைமறைவாக வாழ்வார்களே ஒழிய தமது பெயரைப் பதிவுசெய்வதற்காக நாட்டின் எல்லையைக் கடந்து ஐக்கிய நாடுகளின் ஒரு முகாமுக்குச் செல்ல மாட்டார்கள்.

தற்போதிருக்கின்ற அகதித் தஞ்சம் வழங்குகின்ற ஒழுங்கு முறை சிறப்பாக இயங்கவில்லை என்ற விடயத்தை அரசு முன்னிறுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியது. அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்த 60,000 விண்ணப்பதாரிகளுக்கு இன்னும் முடிவு கொடுக்கப்படவில்லை. தமக்கு எப்படிப்பட்ட ஒரு முடிவு காத்திருக்கிறது என்று எண்ணி அல்லும் பகலும் அங்கலாய்க்கின்ற ஒரு மனித இதயம் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் பின்னால் இருக்கிறது என்பது இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும். இங்கே முடிவுகள் சரியாக எடுக்கப்படாமல் போகலாம். அடிப்படையான தகவல்கள் கவனிக்கப்படாமல் போகலாம் அல்லது அலட்சியப்படுத்தப்படலாம். இதனால் குறிப்பிட்டவர்கள் மேற்கொண்டு சட்டபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். உண்மையில் இது வாழ்வா சாவா என்ற சூழ்நிலை. எனவே தான் தமது விண்ணப்பத்துக்கு ஆதரவாக இணைக்கக்கூடிய சான்றுகள் அனைத்தையும் இணைப்பதற்கு இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் பின்னால் இருக்கின்ற மனித முகத்துக்கு முன்னுரிமை கொடுத்து மனித நேயத்துடனும் இரக்கத்துடனும் அவ்விண்ணப்பங்கள் கையாளப்பட வேண்டும். அது தான் பாதுகாப்பைத் தேடுபவர்களுக்கு உண்மையிலேயே தேவையான விடயமாகும். வின்ட்றஷ் ஊழல் (Windrush scandal) இந்தப் பாடத்தை ஏற்கனவே கற்றுத்தந்திருக்கிறது. எம் ஒவ்வொருவரையும் போலவே அகதிகளும் தங்கள் குடும்பங்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறார்கள். ஆகவே அவர்கள் மீள்குடியேற்றத்திட்டங்களுக்கு ஊடாக வந்தாலென்ன அல்லது தங்கள் சொந்த முயற்சியில் வந்தாலென்ன, அவர்கள் பிரித்தானியாவில் இருக்கின்ற தமது குடும்பத்தவர்களுடன் இணைந்து வாழ உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும். குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கென தற்போது அமுலில் இருக்கும் விதிமுறைகள் வரையறைக்குட்பட்டவையாக இருப்பதோடு பல குடும்பங்கள் இணைவதற்குத் தடையாகவும் இருக்கின்றன. தமது உறவுகள் ஆபத்தான சூழ்நிலைக்குள் தொடர்ந்தும் இருப்பதன் காரணத்தினால் அப்படிப்பட்ட தமது உறவுகளை எண்ணி வருந்துகின்ற அகதிகளில் பலர் தமது வாழ்க்கையை மீளக்கட்டி எழுப்ப முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

WhatsApp Image 2021 03 27 at 8.34.44 PM அகதித் தஞ்ச விண்ணப்பங்களை இரு பிரிவுகளாக வகைப்படுத்தும் பிரீதி பட்டேலின் சர்ச்சைக்குரிய குடிவரவுத்திட்டம் - தமிழில் ஜெயந்திரன்

தாம் மேற்கொண்ட அகதித் தஞ்சக் கோரிக்கைக்கான முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற காலத்தில் இந்த அகதிகள் எப்படிப்பட்ட விதத்தில் நடத்தப்படுகிறார்கள் என்பது நாங்கள் எப்படிப்பட்ட ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது. போரினாலும் மற்றும் துன்புறுத்தல்களினாலும் உடல், உளப் பாதிப்புகளுக்கு உள்ளாகி உயிர்தப்பி வருகின்றவர்கள் மனித நேயத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பது மட்டுமன்றி, அவர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் குறிப்பிட்ட சமூகத்துடன் அவர்கள் இணைந்து வாழ்வதற்கு வேண்டிய உதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இப்படிப்பட்டவர்களை இவர்களுக்கென உருவாக்கப்பட்ட முகாமுக்குள் முடக்கும் அரசின் முன்மொழிவுகள், இந்த அகதிகள் சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் அவர்களுக்கு இல்லாமற் செய்கின்றன. அகதித் தஞ்சக் கோரிக்கைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வேலை செய்வதற்கான அனுமதியை வழங்குவதே உண்மையில் நடைமுறைக்கு உகந்த ஒரு முடிவாக இருக்கும். அவ்வாறான சூழலில் அவர்கள் அரசின் உதவியில் எந்த விதத்திலும் தங்கியிருக்க வேண்டிய சூழல் இருக்காது. பொருண்மியம் என்று பார்க்கும் போது வர்த்தகத்தில் முன்னணி வகிப்பவர்களும் இதனை ஏற்றுக்கொள்வார்கள்.

இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலத்திலிருந்து, ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், ஸிம்பாப்வே, சிரியா போன்ற இன்னும் பல நாடுகளிலிருந்து போர் மற்றும் பயங்கரவாதச் சூழல்களிருந்து உயிர் தப்பி வந்த பலரை நாம் வரவேற்றிருக்கிறோம். இதன் விளைவாக, எமது வர்த்தகச் செயற்பாடுகள், பொதுமக்களுக்கான சேவைகள், கலை, பண்பாடு, கல்வி நிலையங்கள் அனைத்துமே இவர்களால் பயன்பெற்றிருக்கின்றன. அகதித் தஞ்சக் கோரிக்கைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்காது வீழ்ச்சியடைந்து வருவதே இன்றைய யதார்த்தமாகும். உலகிலே உள்ள அதிக பணம் படைத்த நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும். ஆனால் உலகிலுள்ள அகதிகளின் மொத்த எண்ணிக்கையில் ஒரு வீதமானவர்களுக்கு மட்டுமே நாம் பாதுகாப்பைக் கொடுக்கிறோம் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு விடயமாகும்.

பூகோளரீதியான சவால்களைக் கையாளும் விடயத்தில் தான் முக்கிய பங்கை வகிக்க விரும்புவதாகக் கூறுகின்ற இந்தப் ‘பூகோளப் பிரித்தானியாவின்’ தலைமை அமைச்சர் இப்படிப்பட்ட அகதிகளுக்கு இன்னும் அதிகமான உதவியை வழங்க முடியும். வழங்கவும் வேண்டும். இரு படிமுறைகளை ஏற்படுத்தி இந்த அகதிகளில் சிலரை அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைகின்ற வழிமுறைகளை வைத்துத் தண்டிப்பதை விலக்கி, அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் பிரித்தானியாவின் தலைசிறந்த விழுமியங்களில் ஒன்று என்பதை நாம் மிகவும் பெருமையுடன் உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். இவ்வாறாக அகதிகளை இரண்டாகப் பிரிப்பது இப்படிப்பட்ட ‘பூகோளப் பிரித்தானியா’ என்ற எண்ணக்கருவில் ஏற்பட்டுள்ள ஒரு கறையாகும். அதே நேரம் அகதிகளைப் பாதுகாக்கின்ற ஒரு நாடு என்று நீண்ட காலமாக எமக்கிருக்கின்ற நன்மதிப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் ஒரு செயற்பாடும்  ஆகும்.

நன்றி: த காடியன்.கொம் (www.theguardian.com)