அகதிகளுக்கு நியூசிலாந்து சலுகை: காலம் கடத்தும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் இருக்கும் அகதிகளில் ஆண்டுக்கு 150 பேர் என்ற வீதத்தில் மீள்குடியமர்த்துகிறோம் என்ற நியூசிலாந்தின் சலுகையை தொடர்ந்து கிடப்பில் போட்டிருக்கிறது அவுஸ்திரேலிய அரசு.

அதே சமயம், நியூசிலாந்து சலுகையை நிராகரிக்கவில்லை என அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில்  உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்திருக்கிறார்.

படகு வழி வருகைகளை(அகதிகள் வருவதை) தூண்டாத வகையில் அகதிகளை மீள்குடியேற்றுவதை தான் விரும்புவதாக பீட்டர் டட்டன் கூறியிருக்கிறார்.

நியூசிலாந்தில் அகதிகள் மீள்குடியமர்த்தப்பட்டால் அவுஸ்திரேலியாவை நோக்கி மீண்டும் படகு வழியாக அகதிகள் வரக்கூடும் என்ற கருத்தை பல ஆண்டுகளாக அவுஸ்திரேலிய தரப்பு முன்வைத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, படகு மூலம் வருபவர்களை ஒருபோதும் அவுஸ்திரேலியாவுக்குள் குடியமர்த்த மாட்டோம் எனக் கூறி வருகிறது.