ஹொங்கொங் எல்லையில் சீன படை நடவடிக்கை

864 Views

ஹொங்கொங் நகர எல்லைக்கு அருகிலுள்ள சீன நகரில் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டு வருவதை சீன அரசாங்க ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன.

அவை வெளியிட்ட படத்தில் ஷென்ஸென் நகரில் அதிக எண்ணிக்கையிலான கவச வாகனங்கள் நகர்ந்து செல்வதும், சில வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும் காட்டப்பட்டன.

ஹொங்கொங்கில் பத்து வாரங்களாகத் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

இராணுவப் பயிற்சிக்காக கவச வாகன அணிவகுப்பு ஷென்ஸென் நகரை நோக்கிச் செல்வதாக, பீப்பல்ஸ் டெய்லி நாளேடு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது.

ஹொங்கொங்கில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள், சீனாவை சினமூட்டியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின்போது நடந்த வன்செயல்கள் சிலவற்றைப் சீனா ‘பயங்கரவாதம்’ என்று கூறிச் சாடியது.

இம்மாதம் 6ஆம் திகதியன்று, சீன பாதுகாப்பு பிரிவின் 12 ஆயிரம் பேர் ஷென்ஸென் நகரில் கலகத் தடுப்புப் பயிற்சியில் பங்கேற்றனர். சமூக நிலைத்தன்மையைப் பராமரிக்கவும் காவல்துறையினரிடையே நம்பிக்கையை வலுப்படுத்தவும் அந்தப் பயிற்சி நடத்தப்பட்டதாக ஷென்ஸென் நகரக் காவல்துறை குறிப்பிட்டிருந்தது.

கடந்த திங்களன்று விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதால் அனைத்து விமானச் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டன. விமானச் சேவைகள் நேற்று வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்பட்டாலும் இன்னமும் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஹொங்கொங்கில் பொலிஸாரைத் தாக்க ஆபத்தான கருவிகளைப் பயன்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை சீனா கடுமையாகச் சாடியுள்ளது. ஹொங்கொங்கில் பயங்கரவாதம் உருவாவதற்கான முதல் அறிகுறி இது என்று சீனா எச்சரித்திருப்பதாக ஹொங்கொங் வெளியுறவு அலுவலகம் தெரிவித்தது.

ஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிராக ஜூன் இறுதியில் போராட்டம் ஆரம்பமானது.

ஹொங்கொங் அரசு அந்த சட்டமூலத்தை தற்காலிகமாக கைவிட்டதாக அறிவித்துவிட்டது. ஆனால், மக்கள் அந்த சட்டமூலத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர்.

கடந்த பத்து வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹொங்கொங் மக்கள் போராடி வருகிறார்கள். இதன் காரணமாக அங்கு அமைதியின்மை நிலவுகிறது. இதேவேளை ஹொங்காங் நகரத்தைப் பள்ளத்தில் தள்ளிவிடாதீர்கள் என்று போராட்டக்காரர்களிடம் ஹொங்கொங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் கேட்டுக் கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஹொங்கொங்கில் நடந்த கலவரம் குறித்து அந்நகர நிர்வாகத் தலைவர் கேரி லேம் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது “ஹாங்கொங் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஒரு நிமிடம் நமது நகரம், குடும்பம் எப்படி இருக்கிறது என்று சிந்தியுங்கள். உங்கள் போராட்டம் மூலம் இந்நகரத்தைப் பள்ளத்தில் தள்ளிவிடாதீர்கள். இந்த நகரத்தைப் பள்ளத்தில் தள்ளத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? ஹொங்கொங்கைப் பாதுகாப்பாகவும் மற்றும் சட்டம் ஒழுங்குடன் அமைதியாக வழிநடத்துவதே எனது பணியாகும்” என்றார்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹொங்கொங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997ஆம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹொங்கொங் நாட்டுக்கென தனி நாணயம், சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

 

Leave a Reply