சிறீலங்காவில் மத சுதந்திரம் – ஆய்வு செய்ய வருகிறார் ஐ.நா அதிகாரி

சுதந்திரமான மதச் செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதியான அகமட் சகீட் நாளை (15) சிறீலங்கா வரவுள்ளதாக ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நாளை சிறீலங்கா வரும் அதிகாரி 15 ஆம் நாள் தொடக்கம் 26 ஆம் நாள் வரையிலும் சிறீலங்காவில் தங்கியிருப்பார். சிறீலங்கா அரசு எவ்வாறு மதங்களின் சுதந்திரத்தை பாதுகாத்து வருகின்றது, அவற்றை எவ்வாறு ஊக்கிவிக்கின்றது என்பது தொடர்பில் இவர் ஆய்வுகளை மேற்கொள்வார்.

வேறுபட்ட மதங்களிடையேயான உறவையும், சுதந்திரத்தையும் சிறீலங்கா அரசு எவ்வாறு மதிக்கின்றது மற்றும் வேற்று மத இனமக்களை சிறீலங்கா அரசு எவ்வாறு பாதுகாக்கின்றது என்பது தொடர்பில் தான் ஆய்வு செய்யவு;ளதாக சகீட் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட மதங்களின் சுதந்திரமான செயற்பாடு தொடர்பான அதிகாரி அஸ்மா ஜகன்கீர் சமர்ப்பித்த அறிக்கை மற்றும் அவரின் பரிந்துரைகளை சிறீலங்கா அரசு எவ்வாறு நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பிலும் சகீட் ஆராயவுள்ளார்.

தனது 12 நாள் பயணத்தின் போது அவர் அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

அவரின் அறிக்கை 2020 ஆம் ஆண்டு ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இதனிடையே, 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் சிறீலங்கா அரசின் ஆதரவுடன் சிங்களப் பேரினவாதிகள் மேற்கொண்ட பௌத்த மயமாக்கல்கள், சைவ ஆலயங்கள் மீதான அத்துமீறல்கள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை ஆதாரங்களுடன் தயாரித்து ஐ.நா அதிகாரியிடம் தமிழ் மக்கள் வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியா வென்னீரூற்று விவகாரம், நீராவியடிப் பிள்ளையார் கோவில் விவகாரம், தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறி அமைக்கப்படும் பௌத்த ஆலயங்கள் தொடர்பான விவகாரம் மற்றும் சைவ ஆலயங்களிற்கு அண்மையாக சட்டவிரோதமாக அமைக்கப்படும் பௌத்த ஆலயங்கள், இந்து ஆலயங்கள் மீதான சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பான விரிவான அறிக்கை அவரிடம் வழங்கப்படவேண்டும் எனவும், அதற்கான ஏற்பாடுகளை தாயகத்தில் உள்ள பொது அமைப்புக்கள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவதானிப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளது.