விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5ஆண்டுகளுக்கு நீடிப்பு – உறுதி செய்த டெல்லி உயர் நீதிமன்றம்

விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளதை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கின்றது.

1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. ஒவ்வொரு 5ஆண்டுகளுக்கும் இந்த தடை நீடிக்கப்பட்டு வந்தது.

அதைத் தொடர்ந்து, இலங்கையில் புலிகளுக்கும் அந்நாட்டு இராணுவத்திற்கும் இடையே போர் நடைபெற்றது. அதில் விடுதலைப் புலிகள் வீழ்ந்ததாகவும், அந்த இயக்கத்தை முற்றாக அழித்து விட்டதாகவும் இலங்கை அதிகாரபுர்வமாக அறிவித்தது.

இருப்பினும், தமிழகத்தில் அந்த இயக்கத்திற்கான ஆதரவு இருப்பதாகக் கருதப்பட்டது. அதன் காரணமாக 2019ஆம் ஆண்டு புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நீடித்து உத்தரவிட்டது.

அதன்படி, புலிகள் மீதான தடை வரும் 2024ஆம் ஆண்டு வரை அமுலில் இருக்கும். இதற்கிடையே, தடை குறித்து அனைத்து தரப்பினரும் கருத்துத் தெரிவிக்கும் வகையில், மதுரையில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடுவர் மன்றத் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.

டெல்லி உயரநீதிமன்ற நீதிபதி திங்கரா சிங்கால் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி, புலிகளுக்கு ஆதரவாக வாதாடினார்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து டெல்லி உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவையடுத்து, 2024ஆம் ஆண்டு வரை இந்தியாவில் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.