ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டவர் பாதுகாப்பிற்காக படையினர்

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிப்பதற்கென மேலும் 17பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினர் இன்றும் நாளையும் இலங்கை வரவுள்ளனர். இந்தத் தகவலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்தார்.

நாளை (13) நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முடிவிற்கு வருகின்றன. 14, 15ஆம் திகதிகளில் நாட்டில் அமைதி பேணப்படும்.  இந்தக் காலப்பகுதியில் பிரசாரங்களை முன்னெடுப்பது, வீடுகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரிலேயே 17பேரும் இலங்கைக்கு வருகை தருவதாகவும் அந்தக் கண்காணிப்புக் குழுவில் இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, தென் ஆபிரிக்கா, மாலைதீவு, பூட்டான், பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மார் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ இரத்நாயக்க தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் 21மில்லியன் மக்களுக்கான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும் இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டு 2.1 அடி அதாவது 66 சென்ரி மீற்றர் நீளமானது என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் 1,086 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், இதேயளவு சிவில் பாதுகாப்புத் தரப்பினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை வாக்குகள் எண்ணும் மத்திய நிலையங்களில் 2,193 காவல்துறையினர் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.