அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் 150இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

அவுஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத்வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் 80 தீச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். குறைந்தது மூவரை காணவில்லை என்றும், 150இற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் கடும் சேதமடைந்தன என்றும் சொல்லப்பட்டது.

இதேவேளை, இந்த காட்டுத்தீக்கு இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிவடைந்ததே காரணம் என்று மெல்போன் பல்கலைக்கழக விஞ்ஞானி டிரெண்ட் பென்மான் தெரிவித்துள்ளார். உலகின் அனைத்து பகுதிகளும் சூழலியலில் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த காலங்களை விட இந்த ஆண்டு மழைப் பொழிவு அதிகமாகக் காணப்பட்டது. மேலும் ஜுனில் தொடங்கி செப்டெம்பர் மாதத்தில் முடியும் பருவமழை ஒக்டோபர் மாதம் வரை நீடித்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் முடிந்தவுடன் தெற்கு நோக்கி நகர வேண்டிய ஈரக்காற்று, இந்த ஆண்டு தாமதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காட்டுத்தீ காரணமாக நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாண்ட் ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத்தீ காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில், நியூசவுத்வேல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் ஏற்பட்ட அதிக பாதிப்பு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 12இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. காட்டுத்தீ காரணமாக கோலா கரடிகள் உட்பட பல்வேறு உயிரினங்கள் இறந்துள்ளன. மீட்கப்பட்ட சில விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட மிகமோசமான தீ விபத்தாக இது பதிவாகியுள்ளது.