வரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்

வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவுசெலவுத் திட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னனியினரால் இருமுறை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் விநாயகமூர்த்தி சஞ்சுதன்அவர்களை ‘இலக்கு’ நேர்கண்டபோது, அவர் வழங்கிய கருத்துக்களின் தொகுப்பை இங்கு தருகிறோம்.

யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் ஆகியும் எங்கள் பிரதேச எல்லைக் கிராமங்களில் வீட்டுத் திட்டங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. வவுனியா வடக்கு காஞ்சுரமோட்டை என்னுமிடத்தில் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தும் அங்கு குடிதண்ணீர் பிரச்சினை பெரியளவில் உள்ளது. அத்துடன் போக்குவரத்துப் பிரச்சினையும் உள்ளது. அங்குள்ள மாணவர்கள் பாடசாலைக்காக நெடுங்கேணிக்கு வரவேண்டிய தேவை உள்ளது. பஸ் போக்குவரத்துகள் நடைபெறுவதில்லை. இதனால் மாணவர்கள் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர்.kunchuthan வரவு செலவுத் திட்டத்தை ஏன் தோற்கடித்தோம்- த.தே.ம.மு பிரதேச சபை உறுப்பினர்

யுத்தம் முடிவடைந்து இவ்வளவு காலமாகியும் வீதிகள் புனரமைக்கப்படவில்லை. வவுனியா வடக்கைப் பொறுத்தவரையில் 95 சதவீதமானவை விவசாயக் கிராமங்களே. விவசாயிகள் தங்களின் விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கு வீதிகள் புனரமைக்கப்படவில்லை. அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக தேர்தல் நேரங்களிலேயே வந்து  பேசுவார்கள். தேர்தல் முடிய அவர்கள் சென்று விடுகின்றார்கள். மீண்டும் தேர்தல் நேரத்திலேயே வருவார்கள்.

குறிப்பாக காஞ்சுரமோட்டை பகுதியில் சென்று பார்த்தால், அங்கு குடிதண்ணீர் இல்லை. போக்குவரத்து வசதிகள் இல்லை. வவுனியா வடக்கிலுள்ள 20 கிராமசேவகர்கள் பிரிவிலும் இதே நிலைமைதான் உள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக திருத்தப்படாத வீதிகள் இன்றும் அப்படியே உள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட செல்ல முடியாது. மாணவர்கள் பாடசாலைகளுக்குக்கூட போகமுடியாத சூழ்நிலை உள்ளது.

அரசியல் கட்சிகள் இதுபோன்ற விடயங்களை பார்ப்பதில்லை. அவர்கள் தங்களின் தேவைகளுக்காகவே இந்த விடயத்தை மேற்கொள்கின்றார்களே தவிர, மக்களின் தேவை கருதி மக்களுக்காக இதனை செய்ய வேண்டுமென எந்த அரசியல் கட்சிகளும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதில்லை.

பிரதேச சபையால் செய்யப்பட வேண்டிய வேலைகளில் 95 சதவீதமான வேலைகள் நடைபெறவில்லை. 2019ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டமும் பலனளிக்கவில்லை. அதனால் இரண்டு தடவைகள் வரவு செலவுத் திட்டத்தை நாங்கள் தோற்கடித்துள்ளோம்.

பிரதேச சபையால் செய்து தரக்கூடிய வேலைகளைக்கூட செய்து தருவதில்லை என மக்கள் எம்மிடம் கேள்வி கேட்கின்றனர். உள்ளக வீதிகள் பிரதேச சபையால் புனரமைக்கப்பட வேண்டியவை. அவற்றைக்கூட இன்றுவரை பிரதேச சபை மேற்கொள்ளவில்லை. குறித்த பதவியில் இருந்து நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று அறியும் பட்சத்தில் நாங்கள் அந்தப் பதவியிலிருந்து வெளியேறிவிட வேண்டும். அந்த இடத்திற்கு வேறு ஒருவர் வந்து இந்த வேலைகளை செய்யலாம்.

பொதுமக்களுக்கான சந்தைகளைக்கூட அமைத்துத்தர முடியாத நிலைமை உள்ளது. உதாரணமாக 9 கிராமங்கள் அடங்கிய நயினாமடு பிரதேசத்தில் பிரதேச சபைக்கு சொந்தமான காணி உள்ளது. அந்தக் காணியில் ஒரு சந்தை அமைத்துக் கொடுக்கும்படி மனு கொடுத்திருந்தோம். அதைக்கூட செய்து தரவில்லை. அதேபோல் கனகராயன்குளம் தெற்கில் ஒரு சந்தை அமைக்கும்படி கோரப்பட்டிருந்தது. ஆனால் அதையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இவ்வாறே இந்த பிரதேச சபைகள் இருந்து வருகின்றன.

4 ஆண்டுகளாக தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொண்டு தங்களின் பதவிக் காலம் வரையிலும் பொது மக்களை ஏமாற்றிய பின்னர் வீட்டிற்குச் சென்றால் சரியென்ற நிலையே இருக்கின்றது. இதனால் இரண்டு தடவைகள் வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான தேவைகளில் 75 வீதமான தேவைகளையாவது பூர்த்தி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கட்சிகளும் மக்களிடம் சென்று வாக்குக் கேட்கும் பல வேலைத் திட்டங்களை  செய்வோம் என்று கூறியே வாக்குக் கேட்பார்கள். ஆனால் அதில் ஒரு வீதமாவது அந்த மக்களின் பிரதேசங்களில் செய்வதாக தெரியவில்லை. அதனால் ஒழுங்கான ஒரு சரியான தலைமைக்குக் கீழே  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த 17 உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து இந்த வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்துள்ளோம்.

எங்கள் மக்கள் இந்த விவசாயத்தையே நம்பியிருக்கின்றார்கள். அரசியல் கட்சிகள்  முயற்சி செய்து இந்த வீதிகளை புனரமைக்க வேண்டும். மக்களின் சந்தைகள், போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். காஞ்சுரமோட்டை கிராமத்திற்கு அரசியல்வாதிகள், மாகாணசபை உறுப்பினர்கள்  சென்றிருக் கின்றார்கள் என்பதே கேள்விக்குறியாகவுள்ளது. அவர்கள் முகநூல்களின் மூலமாகவே அப்படியான கிராமங்கள் இருக்கின்றன என்பதை அறிகின்றார்களே தவிர  அவர்களுக்கு அப்படியான கிராமங்கள் இருக்கின்றன என்பது தெரியாமலே உள்ளது.

காஞ்சுரமோட்டை, நயினாமடு, சின்னடம்பன் ஊடாக கனகராயன்குளம் செல்கின்ற இந்த மக்கள்கூட எந்தவிதமான போக்குவரத்து வசதிகளும் இல்லாமல் இன்றுவரை தவிக்கின்றார்கள். 30 வருடங்கள் கடந்தும் இன்றும் இவை இல்லை. யுத்தம் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தும்கூட இன்றும் அந்த இடங்களுக்கு பஸ் போக்குவரத்துகள் இல்லை.

எனவே இந்த வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து வசதிகள் செய்ய வேண்டும். இந்த விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவை தொடர்பாக அரசியல் கட்சிகள் முடிவெடுக்க வேண்டும். அதனூடாகத் தான் எங்கள் பிரதேச சபையை அபிவிருத்தி செய்யலாம். மாணவர்களுக்குரிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் மேற்கொண்டாலேயே  மக்களின் வாழ்வாதாரம் உயர்வடையும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply