லெபனான் குண்டு வெடிப்பின் பின்னணி வெளியாகியுள்ளது

373 Views

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பின் பின்னணி அறியப்பட்டுள்ளது. இங்கு வெடித்த அமோனியம் நைத்திரேட் வந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

குண்டு வெடிப்பு நடைபெற்ற துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிடங்கு ஒன்று துறைமுத்தில் இருந்து வரும் பொருட்கள் வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இங்கு இரசாயனப் பொருட்களை கட்டுப்படுத்தும் வசதிகள் ஏதும் கிடையாது.

மேலும் கடந்த 2013ஆம் ஆண்டு இந்த கிடங்கிற்கு 2,750 தொன் எடையுள்ள அமோனியம் நைத்திரேட் பார்சல் வந்துள்ளது. இது ரஷ்யாவிலிருந்து லெபனான் கடற் பகுதிக்கு அருகே கப்பல் வந்த போது கடலில் ஏற்பட்ட காற்று காரணமாகவும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் லெபனான் அரசின் அனுமதியுடன் இந்த ரஷ்யக் கப்பலை அங்கு நிறுத்தியுள்ளனர். இது தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமானது. பின்னர் இந்தக் கப்பலை மீண்டும் துறைமுகத்திலிருந்து அனுப்ப லெபனான் துறைமுக அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

எனவே இதில் இருந்த அமோனியம் நைத்திரேட்டை குறித்த கிடங்கில் வைத்து பின்னர் பணமாக்கலாம் என தீர்மானித்துள்ளனர். குறித்த உரிமையாளரும் இதை ஏற்றுக் கொண்டு விட்டார். காரணம் அமோனியம் நைத்தரேட் விலை குறைவானதாகும். இங்குள்ள அறை இலக்கம் 12 மிகப் பெரியது என்பதால், அந்த அறையிலேயே 2750 தொன் அமொனியம் நைத்திரேட்டும் வைக்கப்பட்டது.

பின்னர் இதை விற்க முயன்ற போது, அதை வாங்க எவரும் முன்வரவில்லை. மீண்டும் உரிமையாளருக்கு விற்க முற்பட்ட போதும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது பற்றி அந்நாட்டு நீதிபதிகள் குழுவிற்கு 6 தடவைகள் கடிதம் அனுப்பியிருந்தனர். ஆனால் ஒவ்வொரு தடவையும் அவற்றை மக்களிடம், இராணுவத்திடம், குண்டுகள் தயாரிக்கும் அதிகாரபூர்வ நிறுவனங்களிடம் விற்று விடுங்கள் என்றே பதில் வந்தது. இருந்தும் இவற்றை வாங்க எவரும் முன்வரவில்லை.

இறுதியாக அனுப்பப்பட்ட கடிதத்தில் இவற்றை வாங்க எவரும் முன்வரவில்லை. இவற்றை பாதுகாக்கும் வசதிகளும் எம்மிடமில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறி கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அக்கடிதத்திற்கு பதில் எதுவும் ரஷ்ய நீதிபதிகள் குழுவிடம் இருந்து வரவில்லை.

இந்த அமோனியம் நைத்திரேட் தொடர்ந்து சேமிப்பில் இருக்கும் போது வெப்பம் அதிகரிப்பால் நெருப்பாக வாய்ப்பு உள்ளது என்றும், இந்த வெப்பத்தின் காரணமாகவே இந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் இவற்றை ஆராய்ந்த வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பின் காரணமாக 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடற்றவர்களாகியுள்ளனர்.

Leave a Reply