யாழ். பல்கலைக்கழகக் கலைப் பீடத்தில் புதிதாகத் தகவல் தொழில் நுட்பத் துறை அமைக்க அனுமதி!

445 Views
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தகவல் தொழில்நுட்பத் துறையை அமைப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் கலைப்பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினை அமைப்பதற்கான பூர்வாங்கவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2021 ம் ஆண்டு முதல் கலைப்பீட மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் கற்கைகளைத்  தொடரமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும்,  கலைப்பீட மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை அதிகரிக்கும் நோக்குடன் – கலைப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புச் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் செயற்திட்டம் ஒன்றினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. இக்கருத்திட்டத்தின் பிரதான நோக்கம் கலைப்பீட மாணவர்களது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவு மற்றும் அது தொடர்பான திறன்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் வேலைவாய்ப்புச் சந்தர்ப்பத்தை இலகுவில் பெறக்கூடிய வேலைப் படையாக மாற்றுதல் மற்றும் அவர்களே மற்றைய நபர்களிற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பிரிவினராகவும் மாற்றுதலாகும்.

அதற்கமைய, தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா, கலைப்பீடதிபதி கலாநிதி க .சுதாகர், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. ரகுராம்,  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். கபிலன் ஆகியோர்  கலைப்பீட மாணவர்களுக்கெனத் தனியான தகவல் தொழில் நுட்பத் துறை ஒன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து, நடைமுறை உலகுக்கேற்றவகையில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில்,  இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கலைப்பீடங்களில் தகவல் தொழில்நுட்ப துறையினை உருவாக்கும் கருத்திட்ட செயல்முறையினை 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பித்தது.

இக்கருத்திட்டத்தின் பிரகாரம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையினை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில் நுட்பத் துறைக்குரிய கட்டிடம் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டிருப்பதுடன், ஏனைய உதவிகளையும், வழிகாட்டல்களையும் துணைவேந்தர் வழங்கி வருகிறார்.

தகவல் தொழில்நுட்பத்துறை ஆரம்பிக்கப்பட்டவுடன் மாணவர்கள் தமது பட்டக்கல்வியை கற்கும் அதே காலப்பகுதியில் தகவல் தொழில்நுட்பத்தில் சாதாரண சான்றிதழையும், டிப்ளோமா சான்றிதழையும் பெற்றுக் கொள்ள முடியும். கொழும்பு பல்கலைக்கழக கணனித்துறை தயாரித்த பாடத்திட்டத்துக் கமைவாக பாடநெறிகள் நடாத்தப்படும் என்று துணைவேந்தர் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply